Home ஆரோக்கியம் ‘ஹெல்தி’ ஸ்நாக்ஸ் என நீங்கள் ஏமாறுகிறீர்களா? சர்க்கரை அளவை எகிற வைக்கும் 5 ஆபத்துகள்!

‘ஹெல்தி’ ஸ்நாக்ஸ் என நீங்கள் ஏமாறுகிறீர்களா? சர்க்கரை அளவை எகிற வைக்கும் 5 ஆபத்துகள்!

ஹெல்தி ஸ்நாக்ஸ் குறித்த எச்சரிக்கை
ஹெல்தி ஸ்நாக்ஸ் குறித்த எச்சரிக்கை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் “ஹெல்தி ஸ்நாக்ஸ்” (Healthy Snacks) வகைகளைத் நாடுகிறோம். ஆனால், அந்த உணவுகளின் லேபிள்களுக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகள் பலருக்குத் தெரிவதில்லை. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கும் சில முக்கியத் தகவல்களை இங்கே காணலாம்.

1. விளம்பரங்களை மட்டும் நம்பாதீர்கள்!

புரோட்டீன் பார்கள், “வறுத்ததல்ல, பேக் செய்யப்பட்டது” (Baked not Fried) போன்ற வாசகங்கள் அந்த உணவு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால், பல நேரங்களில் விழிப்புணர்வை விட விளம்பரங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆரோக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டாலும், சில ஸ்நாக்ஸ்கள் இரத்தச் சர்க்கரை அளவை (Blood Sugar) சட்டென்று உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2. கடுமையான உணவுக்கட்டுப்பாடு தோல்வியடையும்

பிடித்த உணவுகளை முழுவதுமாகத் தவிர்ப்பதோ அல்லது கலோரிகளைக் கடுமையாகக் குறைப்பதோ நீண்ட காலத்திற்குப் பலன் தராது. உடல் சோர்வு மற்றும் அதிகப்படியான பசியைத் தூண்டும் இது ஒரு கட்டத்தில் உணவின் மீதான வேட்கையை அதிகமாக்கிவிடும். இதற்குப் பதிலாக, அரிசிக்குப் பதில் சிறுதானியங்களையும், இனிப்புகளைக் குறைந்த அளவிலும் எடுத்துக்கொள்ளும் ‘போர்ஷன் கண்ட்ரோல்’ (Portion Control) முறையைப் பழகலாம்.

3. கவனிப்பு இல்லாமல் சாப்பிடுவது ஆபத்து

செல்போன் பார்த்துக் கொண்டோ அல்லது டிவி பார்த்துக் கொண்டோ சாப்பிடும்போது (Mindless Eating), நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மூளைக்குப் பதிவு ஆகாது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாமல், தேவைக்கு அதிகமாகச் சாப்பிட நேரிடும். நிதானமாகச் சாப்பிடும்போது உடல் இயல்பாகவே உணவின் அளவைக் கட்டுப்படுத்தும்.

4. ‘ஆரோக்கிய’ பாக்கெட்டுகளில் உள்ள ரகசியம்

கடைகளில் விற்கப்படும் பல சத்தான ஸ்நாக்ஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, பாமாயில், செயற்கை இனிப்புகள் அல்லது அதிக சோடியம் இருக்கலாம். லேபிளின் முன்பக்கத்தைப் பார்ப்பதை விட, அதன் பின்னால் உள்ள மூலப்பொருட்களின் (Ingredients) பட்டியலை வாசிப்பது அவசியம். வேகவைத்த முட்டை, நட்ஸ், அல்லது பழங்கள் கலந்த தயிர் போன்ற எளிய இயற்கை உணவுகளே சிறந்த மாற்றாகும்.

5. உணவைத் தவிர்ப்பது பசியை அதிகரிக்கும்

குறிப்பாகக் காலை உணவைத் தவிர்ப்பது, அன்றைய நாள் முழுவதும் சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும். புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவு, அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஆற்றலைச் சீராக வைத்திருக்க உதவும்.

ஆரோக்கியமான உணவு என்பது ஏதோ ஒரு பிராண்ட் சார்ந்தது அல்ல. அது நாம் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் அளவைப் பொறுத்தது. எதையும் அளவுக்கு அதிகமாகத் தவிர்க்காமல், சரியான முறையில் சாப்பிடுவதே நிலையான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.