கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான “பிரேமம்” மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து “கொடி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். பின்னர் தமிழில் வெளியான “டிராகன்” திரைப்படத்திலும் சிறப்பாக நடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த “பைசன்” திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையில், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் அங்கு தனித்துவமான ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ளார்.
திரைத்துறையுடன் சேர்த்து சமூக ஊடகங்களிலும் (இன்ஸ்டாகிராம் போன்றவற்றில்) ஆக்டிவாக இருந்து, புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி பகிர்ந்து வருபவர் அனுபமா.
இந்நிலையில், சமீபத்தில் அவருடைய சில புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு (மாற்றம் செய்யப்பட்டு) இணையத்தில் பரவியதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
விசாரணையில், அனுபமா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவருடைய புகைப்படங்கள் மார்பிங் செய்து பதிவிடப்பட்டதோடு, அவரையும் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், சக நடிகர்களையும் குறித்தும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் மனம் புண்ணாகிய அனுபமா, உடனடியாக கேரளா சைபர் குற்றப்பிரிவு (Cyber Crime Police) அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த போலி இன்ஸ்டா கணக்கைத் தொடங்கி, அனுபமாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபர் ஒரு 20 வயது இளம்பெண் என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த தகவலை நடிகை அனுபமா தானே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“எனது புகைப்படங்களை மாற்றி வெளியிட்டவர் 20 வயது இளம்பெண் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளனர். அந்த இளம்பெண்ணின் எதிர்காலம் மற்றும் மன அமைதியை கருத்தில் கொண்டு, அவரது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என நான் முடிவு செய்துள்ளேன்.”
“ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகங்களை அணுகுவதால் யாரையும் துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ, வெறுப்பை பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.
இணையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது. அதற்கான பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். இந்தச் செயலில் ஈடுபட்ட இளம்பெண் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்வார்.”
சமீபகாலமாக, பல நடிகைகள் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள் தொடங்கி, அவர்களை அவதூறு செய்வதும், ஆபாசமாக சித்தரிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், நடிகை அனுபமாவும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








