சென்னையில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், ஈவிபி சிட்டியின் முன்னாள் உரிமையாளர் ஈவிபி சந்தோஷ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சுமார் 34.75 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக சந்தோஷ் ரெட்டியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேல்ஸ் (VELS) குழுமம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஈவிபி சிட்டியின் முன்னாள் உரிமையாளர் ஈவிபி சந்தோஷ் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், சமீபத்தில் திறக்கப்பட்ட வேர்ல்ட் ட்ரேட் & கன்வென்ஷன் சென்டர் தொடர்பான நிலப்பரப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வேர்ல்ட் ட்ரேட் & கன்வென்ஷன் சென்டர் அமைந்துள்ள சுமார் 34.75 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் ஸ்டூடியோக்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த முழு நிலப்பரப்பையும் வேல்ஸ் குழுமம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தை வாங்குவதற்காக முதற்கட்டமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் நம்பிக்கையின் அடிப்படையில் பல கட்டங்களாக மேலும் 6.81 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், மொத்தமாக சுமார் 23 கோடி ரூபாய் வேல்ஸ் குழுமத்திலிருந்து ஈவிபி சிட்டியின் உரிமையாளரான ஈவிபி சந்தோஷ் ரெட்டிக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அந்த நிலம் முழுமையாக வேல்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, வேர்ல்ட் ட்ரேட் & கன்வென்ஷன் சென்டர் திறக்கப்பட்டது.
அதன் பின்பு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போது, பல கட்டிடங்களுக்கும் நிலங்களுக்கும் தேவையான முன் அனுமதிகள் பெறப்படாததும், சில பணிகள் முழுமையாக முடிக்கப்படாததும், மேலும் தேவையான சான்றிதழ்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்மூலம், மோசடி செய்து நிலங்களும் கட்டிடங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, வேல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த மேலாளர் குணசேகரன் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஈவிபி சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர்கள் கிரண் ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேல்ஸ் குழுமம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சந்தோஷ் ரெட்டி தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆய்வு செய்த தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஈவிபி சிட்டியின் முன்னாள் உரிமையாளர் ஈவிபி சந்தோஷ் ரெட்டியை தற்போது கைது செய்துள்ளனர்.








