சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமானதாக, முன்னணி நடிகர்கள் இனி “வியாபார பங்கீட்டு முறையில்” (Profit-sharing basis) மட்டுமே நடிக்க வேண்டும் எனவும்,
மேலும் வெப் சீரிஸ் (Web Series) – ஓடிடி (OTT) தளங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு சங்கம் இனி ஒத்துழைப்பு வழங்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, எஸ். சேகர், செந்தில், தேவயானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் முதலில் 2022 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு–செலவு கணக்குகள் ஒப்புதலுக்கு வந்தன. அதேபோல், வாக்களிக்கும் தகுதி பெற்ற நிரந்தர உறுப்பினர்களின் பட்டியலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் 2026–2029 காலத்துக்கான தேர்தல் அறிவிப்பிற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை:
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் ஒரே நேரத்தில் ஓடிடி / வெப் சீரிஸ்களில் நடிக்கக்கூடாது; அப்படி நடிப்பவர்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு வழங்காது.
முன்னணி நடிகர்கள் — ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்டோர் — இனி வியாபார பங்கீட்டு முறையில் (Share basis) மட்டுமே சம்பளம் பெற வேண்டும்.
இதற்கான காரணமாக, முன்னணி நடிகர்களின் அதிகபட்ச சம்பளத்தால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களை சில உறுப்பினர்கள் புரியவில்லை என கூறி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாலும், சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.








