கேஜிஎப் திரைப்படத்தில் “இந்த உலகத்தில் தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை” என நாயகன் யஷ் கூறும் வசனம் அப்போது மிகவும் பிரபலமானது. படம் முழுவதும் தாய் சென்டிமென்ட் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் நடிகர் யஷ்வின் தாய்க்கு சிக்கல் ஒன்று உருவாகி, அது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.
கேஜிஎப் படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் யஷ். படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் சினிமா உலகையே அதிர வைத்தன. கன்னடத்தில் உருவான இந்த படம் எதிர்பாராத வகையில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது.
கேஜிஎப்பின் வெற்றியுடன் பேன்-இந்தியா சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் உறுதியான இடம் பெற்றார் யஷ். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி மெகா ஹிட்டாகியது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மேலும் கவர்ந்தன. இந்நிலையில், யஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கும்போது, அவரின் தாயைச் சார்ந்த சர்ச்சை வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யஷின் தாய் புஷ்பா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படம் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் ஒரு திரைப்படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக ஹரீஷ் என்பவரை புஷ்பா அணுகியிருந்தார். இதன்படி முதலில் ப்ரமோஷன் பணிக்காக 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய 24 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதையும் உடனே கொடுத்துவிட்டதாகவும் புஷ்பா தெரிவித்துள்ளார். இவ்வாறு பல தவணைகளில் மொத்தம் 64 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் பெற்ற ஹரீஷ் எந்த ப்ரமோஷன் பணியும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஹரீஷிடம் கேட்டபோது, அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. படப்பிடிப்பு முடிந்தபின் இதனை பார்த்துக்கொள்ளலாம் என புஷ்பா அமைதியாக இருந்துள்ளார். ஆனால் இதைத்தொடர்ந்து, மீண்டும் பணம் கேட்டதோடு, பணம் தராவிட்டால் படம் வெளியாவதற்கான நேரத்தில் நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து படம் தோல்வியடையச் செய்வேன் என்று ஹரீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. தன்னிடம் பல ஊடகங்கள் தெரியும், ரிலீஸ் நேரத்தில் படத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அவர் கூறியதாக புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சர்ச்சையில் ஹரீஷ் உடன் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் படத்தின் இயக்குனரையும் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து யஷின் தாய் புஷ்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னையும், பட இயக்குனரையும் அவதூறு பரப்புவேன் என ஹரீஷ் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிஆர் சங்கத்திலும் கன்னட திரைப்பட வணிகச் சங்கத்திலும் புஷ்பா புகார் அளித்துள்ளார்.








