சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித் குமார் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சமீப நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள், முக்கிய நபர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் வாயிலாக இதுபோன்ற மிரட்டல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இன்று, காவல்துறை தலைமை இயக்குநருக்கு வந்த மின்னஞ்சலில் நடிகர் அஜித் குமார் இல்லத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே மின்னஞ்சலில் சத்தியமூர்த்தி பவனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர் குழுவினர் சத்தியமூர்த்தி பவனில் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நடிகர் அஜித் குமார் இல்லத்திலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட உள்ளனர்.
தற்போது, இந்த மிரட்டல் தொடர்பாக நீலாங்கரை போலீசாரும், சத்தியமூர்த்தி பவனுக்கு உரிய காவல் நிலைய போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னஞ்சல் அனுப்பியவர் யார், மிரட்டல் உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.








