என் தம்பி ரோபோ சங்கர், பல வருடங்களாக என் நெருங்கிய நண்பராக இருந்தவர். சினிமா உலகில் யாராவது திடீரென மறைந்தால், அதற்குப் பின்னணியில் மது போன்ற காரணங்கள் பேசப்படுவது வழக்கம்.
ஆனால் சங்கரின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்த ஒருவராக நான் சொல்வதென்னவென்றால் அவருடைய உடல்நிலை சிக்கல்களுக்கு உண்மையான காரணம், அவர் செய்த கலை நிகழ்ச்சிகளும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறைகளும் தான்.
ரோபோவாக மேடைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில், உடல் முழுவதும் ஸ்டீல் பெயிண்ட் பூசி மக்களை மகிழ்வித்தார். அந்த நாட்களில் நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நிறமூச்சை அகற்ற தினமும் கெரோசின் போன்ற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது.
இதனால் அவரது தோல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இளமையிலேயே ஏற்பட்ட ஜாண்டிஸ் தொடர்ந்தும் அவருடைய உடலை பலவீனப்படுத்திக் கொண்டே வந்தது. வயது கூடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சிரமங்களை அவருடைய உடல் தாங்க முடியாமல் போனது.
இவ்வளவு இளமையான 46 வயதில் அவர் நம்மை விட்டு நீங்கிப்போனது நம்மை எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “உடலைப் பத்திரமாகக் காக்க வேண்டியது எவ்வளவு அவசியம்” என்பதை சங்கரின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.
அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தியடையட்டும்.








