“எனது பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற முயல்வோர் அமைதியாக இருக்கட்டும்” – நடிகர் அஜித்
நடிகர் அஜித் குமார், தன்னுடைய முந்தைய பேட்டியை நடிகர் விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து தனியார் ஊடகத்திற்குத் தாம் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகளை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஆங்கில ஊடகத்திற்குத் தாம் அளித்த பேட்டியை சிலர் தங்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக திரித்துப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சிலர் அதை அஜித்–விஜய் இடையிலான மோதல் போல காட்டியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அஜித் கூறியதாவது “நான் எப்போதும் ஓட்டு கேட்க வரமாட்டேன். எனக்கென்று எந்த அரசியல் திட்டமோ, உள்நோக்கமோ இல்லை.” அதோடு, கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது, அது “நீண்ட நாட்களாக நடந்தேற காத்திருந்த விபத்து” என்றும் கூறியுள்ளார்.
“அந்த விபத்தில் ரசிகர்களையோ தொண்டர்களையோ குறைசொல்ல என்ன உரிமை எனக்குள்ளது? நானும் அந்த குற்றத்திற்கு ஒரு அளவுக்கு பொறுப்பேற்கிறவன் தான்,” என்று அஜித் தெரிவித்தார்.
“மக்களும் அரசும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்திருக்க வேண்டும்.சுரண்டப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பதாகச் சில போலி சமூக ஆர்வலர்கள் நடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட போலிகளால் மூளைச் சலவை ஆகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.”
“எனது பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், அவரை எப்போதும் வாழ்த்தியே வந்திருக்கிறேன்.”
அதோடு, தன்னைப் பிடிக்காத சிலர் எப்போதும் தன்னை ‘வேற்றுமொழிக்காரன்’ என்று கூறி வந்ததாகவும், “ஒருநாள் அவர்கள் உரத்த குரலில் என்னை தமிழன் என்று அழைப்பார்கள்,” எனவும் தெரிவித்துள்ளார்.
“கார் ரேசிங் துறையில் சாதித்து, இந்த மாநிலத்துக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன். அதற்காக என் உயிரே போனாலும் எனக்கு பரவாயில்லை.”








