பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்பதாவது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் காலை 11 மணிக்கு 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பொதுவாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. இருப்பினும், இம்முறை பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அன்று பங்குச் சந்தைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, நிலையான கழிவு தொகையை ரூ.75,000 இலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என நடுத்தர வர்க்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ‘கப்பிள் டாக்ஸ்’ எனப்படும் தம்பதிகள் இணைந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்யலாம் என்ற பரவலான கருத்தும் நிலவுகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 நிதி உதவி, ரூ.9,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘பூமித்தாய்’ திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயத்திற்கு கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்தியத் துறைத் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.
ஓசூரில் அமைய உள்ள ஐபோன் தயாரிப்பு உள்ளிட்ட மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை–எழும்பூர் இடையேயான நான்காவது ரயில் பாதை உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தவும் நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோவின் இரண்டாவது விண்கலம் ஏவுதளப் பணிகளுக்காக, இந்த பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்படலாம். இது தென் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் முக்கிய காரணியாக அமையும் என கூறப்படுகிறது.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பட்ஜெட்டில் பீகாருக்கு அறிவிக்கப்பட்டதைப் போல, இம்முறை மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரம்மாண்டமான நிதித் தொகுப்பு அறிவிக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, தமிழ்நாடு என்ற பெயரையே நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








