மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று 129 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் — மொத்தம் 137 பேரும் இணைந்து சென்னைக்கு புறப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பாகவே சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சலில், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன, விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் வெடித்து சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு குழுவினர் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமான பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில், சென்னைக்கு வந்து தரையிறங்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை முழுமையாகச் சோதனை செய்யவும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சோதனைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தடம் எண் 27-ல் வந்து நின்றது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடிப்படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று அனைத்து பகுதிகளையும் விரிவாகச் சோதனை செய்தனர்.
விமானத்தில் வந்த 129 பயணிகளின் உடைமைகளும் மோப்ப நாய்கள் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டன. ஆனால், எந்தவிதமான மர்மப் பொருள்களோ அல்லது வெடிகுண்டுகளோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், இது வழக்கமான வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் நிம்மதி அடைந்தனர்.
அந்த விமானம் சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு காலை 11.45 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால் தீவிர சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இன்று மதியம் 12.40 மணிக்கு 164 பயணிகளுடன் கோலாலம்பூருக்கு புறப்பட்டது.
இதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள்களாக தொடர்ச்சியாக வெளிநாட்டு விமானங்களுக்கு இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதால், இது ஒரு சமூக விரோத கும்பல் திட்டமிட்டு செய்யும் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சென்னை நகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த மர்ம மின்னஞ்சல் அனுப்பியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.








