Home இந்தியா சிறார்களின் உயிரை பறித்த இருமல் மருந்து..! ”தமிழகத்தில் விற்பனை நிறுத்தம்”

சிறார்களின் உயிரை பறித்த இருமல் மருந்து..! ”தமிழகத்தில் விற்பனை நிறுத்தம்”

மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்ததற்கு காரணமாக கூறப்படும் கோல்ட்ரிஃப் (Goldriff cough syrup) என்ற இருமல் மருந்தை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் தடைவிதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் ஏழு வயது வரை உள்ள ஆறு குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தனர். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரிய வந்தது.

விசாரணையில் , கோல்ட்ரிஃப் சிரப் மற்றும் நெக்ஸ்ட்ரோ டிஎஸ் ஆகிய இருவேர் இருமல் மருந்துகளை அந்த குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனிடையே மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்ததுறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கோல்ட்ரிஃப் மருந்தை சோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை எடுத்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் எஸ். குருபாரதி தலைமையிலான குழுவினர் கடந்த இரு நாட்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும்வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும் வினியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கனவே விற்பனையில் இல்லை என எஸ் குருபாரதி தெரிவித்துள்ளார்.