Home இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி: “தங்க நகை” – கிராம் கணக்கில் புதிய விதி!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி: “தங்க நகை” – கிராம் கணக்கில் புதிய விதி!

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் தங்க நகைகளுக்கான வரிச்சலுகை தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த மதிப்பு அடிப்படையிலான வரிச்சலுகை முறையை ரத்து செய்து, இனி எடை அடிப்படையில் மட்டும் தங்க நகைகள் கொண்டு வர அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருவோர் தங்க நகைகள் கொண்டு வருவதற்கான விதிகளில் மத்திய நிதி அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் “Baggage Rules 2026” என்ற பெயரில் வெளியிடப்பட்டு, 2026 பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த விதிகளின்படி,
பெண்கள் தலா 40 கிராம் தங்க நகைகளையும்,
ஆண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் தலா 20 கிராம் தங்க நகைகளையும்
சுங்கவரி இன்றி கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இந்தியா திரும்பும் பயணிகள், இந்த அளவிற்குள் தங்க நகைகள் கொண்டு வந்தால் எந்தவித சுங்கவரியும் விதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், தங்க நகைகள் கொண்டு வருவதற்கு ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் வரை என்ற வரம்பு நடைமுறையில் இருந்தது. ஆனால் புதிய விதிகளின் மூலம் அந்த மதிப்பு வரம்பு முற்றிலும் நீக்கப்பட்டு, இனி எடை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வருவோர் தங்க நகைகள் கொண்டு வருவதில் இருந்த குழப்பங்கள் குறைந்து, விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.