Home இந்தியா “ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி? RAC கட்டண முறையில் மாற்றம்”

“ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி? RAC கட்டண முறையில் மாற்றம்”

ஆர்ஏசி (RAC) பயணிகளிடம் பாதி கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு பரிந்துரை வழங்கியுள்ளது. படுக்கை வசதி வழங்கப்படாமல், முழு கட்டணத்தை ஆர்ஏசி பயணிகளிடம் வசூலிப்பது முறையற்றது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு, இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, ஆர்ஏசி பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இயக்கப்படும் 478 அதிவிரைவு ரயில்களில் 123 ரயில்கள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 123 ரயில்களில் 47 ரயில்கள் மட்டுமே சராசரியாக 55 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கூடுதல் கட்டணம் வசூலிக்க மட்டுமே இவை அதிவிரைவு ரயில்களா என்ற கேள்வியையும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு எழுப்பியுள்ளது.

ஆர்ஏசி பயணிகளுக்கு படுக்கை வசதி வழங்கப்படாமல் முழு கட்டணம் வசூலிப்பது முறையற்றது என்றும், அந்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சராசரியாக 55 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்களை “அதிவிரைவு ரயில்” என்று அழைக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.