Home இந்தியா “300 கி.மீ தொலைவில் எதிரியை அழிக்கும் ஐஸ் பிரேக்கர் ஏவுகணை”!

“300 கி.மீ தொலைவில் எதிரியை அழிக்கும் ஐஸ் பிரேக்கர் ஏவுகணை”!

இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை பல மடங்கு உயர்த்தும் ஐஸ் பிரேக்கர் திட்டம் :

இந்திய கடற்படையின் தாக்குதல் சக்தியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இஸ்ரேல் நிறுவனமான ரபேல் (Rafael) தயாரித்த ஐஸ் பிரேக்கர் (ICE BREAKER) ஏவுகணையை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த ஏவுகணையை MH‑60R ரோமியோ (Sea Hawk) ஹெலிகாப்டர்களில் பொருத்தினால், 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எதிரி கப்பல்களை தாக்கும் திறன் கிடைக்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், இதுவரை ரோந்து பணிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள், எதிரி கப்பல்களை வேட்டையாடும் சக்திவாய்ந்த “Ship Killer” ஆக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த ஏவுகணை ஐந்தாம் தலைமுறை குரூஸ் ஏவுகணை வகையைச் சேர்ந்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கடலில் உள்ள பல கப்பல்களில் இருந்து எதிரி கப்பலை மட்டும் துல்லியமாக அடையாளம் கண்டு தாக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடலின் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வாக பறப்பதால், எதிரி ரேடார் மற்றும் GPS ஜாமிங் முறைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.

தற்போது இந்தியா பயன்படுத்தும் ஹெல்ஃபயர் ஏவுகணைகள் குறைந்த தூரத் தாக்குதல் திறன் கொண்டவை. அதனால் நீண்ட தூரத் தாக்குதலுக்கான மாற்றாகவே ஐஸ் பிரேக்கர் ஏவுகணை பரிசீலனையில் உள்ளது. சுமார் 400 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை, MH‑60R ஹெலிகாப்டர்களுக்கு ஏற்றதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய விமானப்படை இந்த ஏவுகணை தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தற்போது இந்திய கடற்படை இதனைச் சோதனை மற்றும் ஆய்வு நிலையில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், ரபேல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது எதிர்காலத்தில் இந்தியாவின் கடற்படை தாக்குதல் திறனை வலுப்படுத்தும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.