Home இந்தியா ICMR உறுதி செய்த ஆய்வு: இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் ஆய்வு!

ICMR உறுதி செய்த ஆய்வு: இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் ஆய்வு!

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்பான ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு கொலம்பியாவில் நடத்தப்பட்டுள்ளது.

உடலில் விட்டமின் டி அளவு குறைவாக உள்ளவர்களுக்கு, டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிக தீவிரமாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் வேறு என்னென்ன கூறப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.

இந்த ஆய்வு கொலம்பியாவில் நடத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கும் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. காரணம், டெங்கு பாதிப்பும் விட்டமின் டி குறைபாடும் — இரண்டுமே இந்தியாவில் பரவலாக காணப்படுகின்றன.

இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளியான இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2025 நவம்பர் வரை சுமார் 1,13,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 95 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR ஆல் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஆய்வறிக்கையின்படி, ஒரு மனிதனின் உடலில் உள்ள விட்டமின் டி அளவுக்கும், அவருக்கு ஏற்படக்கூடிய டெங்கு நோயின் தீவிரத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது.

லேசான டெங்கு பாதிப்பு உள்ள நோயாளிகளில் விட்டமின் டி அளவு போதுமானதாக இருந்ததாகவும், கடுமையான டெங்கு பாதிப்பு உள்ளவர்களிடையே விட்டமின் டி குறைவாக இருந்ததாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

பொதுவாக விட்டமின் டி குறைபாட்டால் முடி கொட்டுதல், எலும்பு வலி, அடிபட்ட காயங்கள் ஆறுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் காணப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, அதே நேரத்தில் உடலில் விட்டமின் டி குறைவாக இருந்தால், அது உடலில் வீக்கத்தை அதிகரிக்கச் செய்து, வைரஸ் வேகமாக பரவ காரணமாகும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அது மட்டுமல்லாமல், விட்டமின் டி குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி (இம்யூனிட்டி) குறைவதோடு, லேசான தொற்றுகள்கூட கடுமையான நோய்களாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறிப்பாக டெங்கு பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளை வைத்து நடத்தப்பட்டுள்ளது. ஆனால், வெறும் 100 பேரை மட்டும் வைத்து, விட்டமின் டி குறைபாடு காரணமாக டெங்கு கடுமையாகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது.

இதற்கு முன் இன்னும் அதிகமான ஆய்வுகள் தேவை என்றும், குறைந்தபட்சம் ஆயிரம் அல்லது லட்சக்கணக்கான நோயாளிகளை வைத்து ஆய்வு செய்தால்தான் தெளிவான முடிவுக்கு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, விட்டமின் டி அளவு குறைவாக இருந்தால் டெங்கு பாதிப்பு அதிக தீவிரமாகுமா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல இன்னும் கூடுதல் ஆய்வுகள் அவசியம். இது முதல் முறையாக வெளியான ஒரு சிறிய ஆய்வு என்பதால், இதை இறுதியான முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது.

விட்டமின் டி எப்படி டெங்கு தீவிரத்தை அதிகரிக்கலாம் என்றால், விட்டமின் டி சில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விட்டமின் டி அளவு குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, லேசான தொற்றுகள்கூட கடுமையாக மாற வாய்ப்பு உள்ளது. இதே நிலை காசநோய் (டிபி) போன்ற பிற நோய்களிலும் காணப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி, டெங்கு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொசுதான். கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதும், கொசுவலை பயன்படுத்துவதும் டெங்குவிலிருந்து நம்மை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகள்.

விட்டமின் டி அளவை அதிகரிக்க, தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை உடலில் வெயில் படும்படி இருப்பது போதுமானது. வெயிலிலிருந்து நேரடியாக விட்டமின் டி கிடைப்பதில்லை; ஆனால், வெயில் உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் டியை செயல்படச் செய்து, உடலுக்கு பயன்படும் வடிவமாக மாற்றுகிறது.

உணவின் மூலம் விட்டமின் டி பெற விரும்பினால், பால், பால் சார்ந்த பொருட்கள் (சீஸ், பட்டர், பன்னீர்), மீன், முட்டை, மஷ்ரூம்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்திலும் விட்டமின் டி அதிக அளவில் உள்ளது.

மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகளாகவும் விட்டமின் டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உடலில் என்ன குறைபாடு உள்ளது என்று தெரியாமல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக மருந்துகள் எடுத்துக்கொண்டால், விட்டமின் டி தேவைக்கு அதிகமாக கூட வாய்ப்பு உள்ளது.

விட்டமின் டி அதிகமானால், சிறுநீரக கற்கள் (Kidney Stone) உருவாகும் அபாயமும் அதிகரிக்கும். எனவே, எந்த நோய்க்கும் மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துக்கொண்டால், அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.