ஓசூர் அருகே, ரகசிய காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து அகற்றத் திட்டமிட்ட மனைவியும், அதில் ஈடுபட்டவர்களும் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளனர்.
இதற்காக, அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த ஒரு இளைஞருக்கு பணம் தருவதாக கூறி அவரை பயன்படுத்தியுள்ளனர். பணத்தை பெற்ற அந்த இளைஞர், கணவனை கொலை செய்துவிட்டதாக பொய் தகவல் கொடுத்துள்ளார்.
கணவர் இறந்துவிட்டார் என நம்பிய மனைவி, அவரைக் காணவில்லை என்று போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து நாடகம் ஆடியுள்ளார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவத்தின் முழுப் பின்னணியும் வெளிச்சத்துக்கு வந்தது.
ஓசூர் அருகே தளி அடுத்துள்ள கெபரே தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சாமப்பா (40). அவரது மனைவி பாக்கியா (32). பாக்கியா, அகலக்கோட்டை அருகே உள்ள ஒரு நர்சரி பண்ணையில் வேலை செய்து வந்தார். அந்த பண்ணை உரிமையாளர் பால்ராஜ்.
கடந்த 20ஆம் தேதி, சாமப்பா தனது நண்பர் நாகமணியுடன் கர்நாடக மாநிலம் கொலகண்டி பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்றார். வேலை முடிந்து நாகமணி மட்டும் ஊர் திரும்பினார். ஆனால் சாமப்பா வீடு திரும்பவில்லை.
கணவர் வீட்டிற்கு வராத நிலையிலும், பாக்கியா உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. குடும்பத்தினர் வற்புறுத்திய பின், 30ஆம் தேதி தளி போலீசில் காணாமல் போனவர் குறித்து புகார் அளித்தார். புகார் தாமதமாகியதால் போலீசாருக்கு பாக்கியா மீது சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பாக்கியாவுக்கும் பண்ணை உரிமையாளர் பால்ராஜுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரகசிய உறவு இருந்தது தெரியவந்தது. இது சாமப்பாவுக்கு தெரிய வந்ததால், அவர் பாக்கியாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருமே சாமப்பாவை அகற்ற திட்டமிட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் பால்ராஜின் நண்பர், மஞ்சுகிர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், வரும் 10ஆம் தேதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு பணத் தேவையிருந்ததை அறிந்த பால்ராஜ், ₹2.5 லட்சம் கொடுத்து சாமப்பாவை அகற்றச் சொல்லியுள்ளார். பணம் தேவைப்பட்டதால் சீனிவாசன் சம்மதித்தார்.
பின்னர் சாமப்பாவை கொன்றுவிட்டதாக பால்ராஜிடம் அவர் பொய்யாகச் சொன்னார். இதனால் பாக்கியாவும் பால்ராஜும் நிம்மதியாக இருந்ததாக போலீசார் கூறினர்.
ஆனால் போலீசார் சீனிவாசனை கைது செய்து விசாரிக்கையில் திடீர் திருப்பம்—சாமப்பா உயிருடன் இருப்பது தெரியவந்தது.
சாமப்பாவை, நண்பர் நாகமணியிடமிருந்து பிரித்து, கர்நாடகாவில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மதுபோதையில் இருந்த அவரை வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பெயரில் கடத்தியதாகவும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரை கொலை செய்யாமல், கர்நாடகாவில் வேலைக்கு ஒப்படைத்து, அவரின் செல்போன் அணைக்கப்பட்டதாக விசாரணையில் தெரிவித்தார்.
இதையடுத்து சாமப்பாவை மீட்ட போலீசார், அவரை அகற்ற முயன்றதாக பால்ராஜ், பாக்கியா, மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
காதல் தொடர்பான சச்சரவால் கணவனை அகற்றத் திட்டமிட்ட மனைவியும், அவருடன் இணைந்த காதலனும், உதவியாளரும் சிக்கிய இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








