எஸ்ஐஆர் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பனர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சரே நேரடியாக நீதிபதிகள் முன் ஆஜராகி தமது தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார் என்பதே இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையின் கீழ், வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், மேலும் 1.25 கோடி வாக்காளர்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் அடையாள ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புகள் உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், முரண்பாடுகள் உள்ள வாக்காளர்களின் விவரங்களை கிராம மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. ஒரு மாநில முதலமைச்சரே நேரடியாக வாதாட இருப்பதால், இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விசாரணையின் முடிவை பொறுத்தே, மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








