அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை ஒருங்கிணைத்து புதிய படிப்பை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
ஆங்கில மருத்துவமான அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை ஒரே கல்வி பாடத்ததிட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டம் கருத்தியல் நிலையில் இருப்பதாகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பிற்போக்குதனமான இந்த கல்வி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜிப்மர் நிர்வாகம் ஹலோபதி ஆயுர்வேதா ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட படிப்பு என்று கூறியுள்ளது.
ஒரு வருட பயிற்சியுடன் கூடிய இரட்டை பட்ட படிப்பாக இருக்கும் என்றும் முதல் கட்டத்துக்கான பாடத்ததிட்டம் தயாராக உள்ளதாகவும் ஜிப்மர் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் புதிய படிப்புகள் மற்றும் பாடத்ததிட்டங்களை முடிவு செய்யும் தேசிய மருத்துவ ஆணையம் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணயம் உள்ளிட்ட ஒழுங்கு முறை அமைப்புகள் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் ஆர்டிஐ (RTI) தகவலில் கூறப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிஏஎம்எஸ் (MBBS + BAMS) பட்டங்களை ஒன்றாக வழங்குவதற்கு இந்தியாவில் இதுவரை எந்த சட்டத்தின் கீழும் வழிவகை செய்யப்படவில்லை என்று கூறியுள்ள டாக்டர் பாபு எந்த அடிப்படை ஆய்வுகளும் இன்றி தயாரிக்கப்பட்ட ஆரோவில் அறக்கட்டளையின் திட்டத்தை ஒன்றிய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.








