Home இந்தியா “மூச்சே விஷமாகும் நகரம் – டெல்லியின் மாசு நெருக்கடி”

“மூச்சே விஷமாகும் நகரம் – டெல்லியின் மாசு நெருக்கடி”

காலையில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். வழக்கம்போல காற்று வாங்குவதற்காக ஜன்னலை திறக்கிறீர்கள். திடீரென்று பார்த்தால், உங்களைச் சுற்றி எல்லாமே புகையாக இருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் கூட விஷம் பரவி இருக்கிறது. அப்படியான சூழலில் சிக்கிக் கொண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? — இப்படித்தான் தினந்தோறும் டெல்லி மக்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் தலைநகரமாக மட்டுமல்லாமல், மிகப் பெரிய பன்னாட்டு நகரங்களில் ஒன்றாக இருக்கும் டெல்லியில் இப்படி ஒரு நிலைமையென்றால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இதே நிலைமை உருவாகக் கூடும்,

சரி, குறிப்பாக டெல்லியிலேயே ஏன் இவ்வளவு காற்று மாசு உள்ளது என்று பார்த்தால் — அங்குள்ள மக்கள் தொகை அதிகம் என்பதால், வாகனங்களின் புகை காற்று மாசுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இன்னொரு காரணம் என்னவென்றால், குளிர்காலங்களில் அங்குக் காற்று சரியாக வீசாது. அதனால் டெல்லியில் மாசு அப்படியே தேங்கி விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூச்சு விட சுத்தமான காற்றே இல்லாமல் தவிக்கும் அங்குள்ள மக்கள், ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு ஏர் பியூரிஃபையர்களை வைத்து, வீட்டுக்குள்ளேயே காற்றை சுத்தப்படுத்தி சுவாசித்து வருகிறார்கள்.

இப்போது டெல்லியில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு, BS6 விதிமுறைகளை பின்பற்றாத கனரக சரக்கு வாகனங்கள் இனிமேல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க டெல்லி போக்குவரத்து போலீசார் 23 குழுக்களை அமைத்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாகனங்கள் வரக்கூடிய டெல்லியின் முக்கிய பகுதிகளில் இந்தக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதைத் தவிர, CNG, LNG மற்றும் மின்சார சரக்கு வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரே உத்தரவினால் டெல்லியில் கொஞ்சமாவது காற்று மாசு கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.