Home இந்தியா “நாய்களின் நடமாட்டத்திற்கு கடைசி எச்சரிக்கை”

“நாய்களின் நடமாட்டத்திற்கு கடைசி எச்சரிக்கை”

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு: பொதுவளாகங்களில் தெருநாய்களை எட்டு வாரங்களில் அப்புறப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுவளாகங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, நாய்க்கடியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்வி. அஞ்சாரியா ஆகியோர் அமர்வில், கடந்த 3ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், தனிநபர்கள் ஆகியோர் பல இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வைப்பது போன்ற சூழல்கள் காணப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டு, இதுகுறித்து சில முக்கிய உத்தரவுகளை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

தற்போது அதன்படி வெளியிடப்பட்ட உத்தரவுகளில், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், பணிமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுவளாகங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

அவ்வாறு பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்ட பின் மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விடுவது உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தையே தோல்வியடையச் செய்யும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பொதுவளாகங்களில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த வளாகங்களை பராமரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளனவா என்பதை உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாநில அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் இத்தகைய பொதுவளாகங்களை அடையாளம் கண்டு, நாய்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை எட்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விபத்துகளைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து மக்கள் புகார் அளிக்கக்கூடிய அவசரகால எண்ணை அமைக்கவும், அவ்வகை கால்நடைகளை பிடித்து மறுவாழ்வு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகள் எட்டு வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் விசாரணை தொடரப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.