ராஜஸ்தானில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு நபர் அழுகிய நிலையில் நீல நிற ட்ரம்மில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கிஷன் கர்பாஸ் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூழையில் வேலை செய்து வந்த இவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆதர்ஷ் காலனியில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டு உரிமையாளரான வயதான பெண் ஒருவர் தனது வீட்டின் மொட்டைமாடியில் துணிகளை காய வைக்க சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு இருந்த நீல நிற டிரம்மிலிருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த அந்த பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த நீல நிற டிரம்மின் மீது மூடப்பட்டிருந்த துணியை நீக்கி சோதனை செய்தனர்.
அப்போது அந்த ட்ரம்மில் அழுகிய நிலையில் ஹன்ஸ்ராஜின் சடலம் கிடந்துள்ளது. இதனைக் கண்டு வீட்டின் உரிமையாளரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹன்ஸ்ராஜின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட தடையங்கள் இருந்தன. உடல் அழுகாமல் இருக்க டிரமில் உப்பு நிரப்பப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஹன்ஸ்ராஜின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடந்ததிலிருந்து ஹன்ஸ்ராஜின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஹன்ஸ்ராஜின் கொலைக்கும் அவரது மனைவிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? அவரின் உடல் டிரம்மில் எத்தனை நாட்கள் கிடந்தது? அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் கணவனை 15 துண்டுகளாக வெட்டி டிரமில் அடைத்து வைத்து பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் உல்லாசப் பயணம் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அதை தொடர்ந்து நீல டிரம் பயன்பாட்டை கேலி செய்யும் விதமாக பல்வேறு மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகின.
மேலும் நீல நிற டிரம்களை வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்ற அளவிற்கு அந்த விவகாரம் பூதாகரமானது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை போன்றே ராஜஸ்தானில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








