குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, சிறப்பு அமர்வைச் சேர்ந்த நீதிபதிகள் எம். சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஆஜரான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI), உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.
மேலும், மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து லக்னோ, கொச்சி மற்றும் பிலானி ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
அத்துடன், ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்ததில், அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டனர்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களை கட்டாயமாக இட வேண்டும் என குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதால், இந்நிலையில் எச்சரிக்கை வாசகங்களை இடுவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என வாதிட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆய்வுகளை விரைவாக முடித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு உத்தரவிட்டு, அதுவரை குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடுவது தொடர்பான முடிவை ஒத்திவைத்தனர்.








