இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார்.
கடைசியாக 1999ஆம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதேபோல் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது.
அந்த காலனிய நடைமுறையை மாற்றி, காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை 1999ஆம் ஆண்டில்தான் கொண்டு வந்தனர். தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் உரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மிகவும் முக்கியமான அம்சமாக இருப்பது வரவிருக்கும் தேர்தல்கள்தான். விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்த பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது.
அதே பாணியில், தற்போது தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநில மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓட்டுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா என்பதையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மற்றொரு புறம், சாமானிய மக்கள் கடும் பொருளாதார அழுத்தத்துடன் காத்திருக்கின்றனர். தங்கம், வெள்ளி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்களால் சிறிதளவு தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், உணவுப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுமா? வேலைவாய்ப்பின்மையை போக்கும் வகையில், தனியார் துறையில் கடந்த முறை அறிவித்ததைப் போல புதிய திட்டங்கள் வருமா? குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக்கு வருமான வரியில் சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில், 2026–27 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட் தேர்தல் காலகட்டத்தில் வருவதால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது “ஜாக்பாட்” ஆக அமையுமா, அல்லது வழக்கம்போல் தானா என்பதற்கு இன்னும் சில நேரங்களில் நிதியமைச்சரின் அறிவிப்பே பதில் சொல்லும். பொறுத்திருந்து பார்க்கலாம்.








