Home இந்தியா ”மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை! புதுச்சேரியில் 3 மாத்திரைகள் விற்பனைக்கு தடை”

”மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை! புதுச்சேரியில் 3 மாத்திரைகள் விற்பனைக்கு தடை”

தரமற்ற மருந்துகள் மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன. மருந்துகளை போதைப் பொருளாக தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களாலேயே சில மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது, அந்த மருந்துகளை தவறான முறையில் பயன்படுத்துவது, தேவையில்லாத நேரங்களிலும் அதிக அளவில் விநியோகம் செய்வது போன்ற காரணங்களாலும் இந்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

இந்த வகையில் புதுச்சேரியில் சில மருந்துகளைத் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி அனந்த கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவின் படி, குடல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிறுமூர் பகுதியில் உள்ள நோனஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்த மேக்மஞசோ 40 மாத்திரை, கேரளா மற்றும் அகமதாபாத் பாவிய மாவட்டத்தில் உள்ள அபான் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்த வெபாவிட் என்ற பாராசிட்டமால் 650 மில்லிகிராம் மாத்திரை, அதேபோல் ராஜஸ்தானின் பைவாதி பகுதியில் உள்ள கார்னாணி பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்த சங்காவதி 5 கிராம் மாத்திரை ஆகிய மூன்று மாத்திரைகளும் புதுச்சேரியில் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகள் எதையும் புதுச்சேரியில் உள்ள மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. கடைகளில் ஏற்கனவே இருப்பு இருந்தால், அந்த இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன் பின்னர், அந்த மருந்துகளை தயாரித்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் புதுச்சேரியில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை மருந்துக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.