2025ஆம் ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில், இந்திய மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து மிக முக்கியமான ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி (Swiggy) கடந்த ஒரு ஆண்டில் இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், இட்லி–தோசையை முந்தி மேற்கத்திய உணவுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனவா? அல்லது நம்ம ஊரின் பிரியாணிதான் மீண்டும் “ராஜா உணவு” என்பதை நிரூபித்துள்ளதா? வெறும் பசியை ஆற்றுவது மட்டுமல்ல, அது ஒரு கொண்டாட்டம் என்பதையும் 2025ஆம் ஆண்டு மீண்டும் பிரியாணி நிரூபித்துள்ளது.
ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியர்களின் உணவுத் தட்டில் அதிகம் இடம்பிடித்த டாப் 10 உணவுகள் எவை என்பதை வரிசையாக பார்க்கலாம்.
10வது இடம்:
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான மெதுவடை. காலை உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் விரும்பப்படும் முறுமுறுப்பான மெதுவடைக்கு மக்களிடையே குறைவில்லா வரவேற்பு உள்ளது.
9வது இடம்:
சிக்கன் நகட்ஸ். சுமார் 29 லட்சம் ஆர்டர்களுடன், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்துள்ளது.
8வது இடம்:
சிக்கன் ரோல். அவசர நேரத்திலும் ருசியாக சாப்பிடக்கூடிய இந்த உணவு சுமார் 41 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
7வது இடம்:
இனிப்பு பிரியர்களின் தேர்வான குலாப் ஜாமுன். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சுமார் 45 லட்சம் ஆர்டர்களுடன், இனிப்பு வகைகளில் முதலிடம் பிடித்துள்ளது.
6வது இடம்:
ஒரு ஆச்சரியமான தேர்வு — வைட் சாக்லேட் கேக். இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை விட, வைட் சாக்லேட் கேக்குக்கு அதிக வரவேற்பு இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 69 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளது.
5வது இடம்:
எளிமையானதும் ஆரோக்கியமானதுமான இட்லி. சுமார் ஒரு கோடியே 10 லட்சம் முறை இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை உணவில் இட்லிக்கு மாற்று இல்லை என்பதையே இது காட்டுகிறது.
4வது இடம்:
வெஜ் தோசை. சுமார் 2 கோடியே 62 லட்சம் ஆர்டர்களுடன், வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவரையும் கவர்ந்த உணவாக தோசை திகழ்கிறது.
இனி டாப் 3 இடங்களைப் பார்ப்போம். இங்குதான் போட்டி கடுமையாக உள்ளது.
3வது இடம்:
பீட்சா. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 4 கோடிக்கும் அதிகமான பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நண்பர்கள் கூடும் பார்ட்டிகளில் பீட்சா தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
2வது இடம்:
பர்கர். பீட்சாவை விட சற்றே முன்னிலை பெற்று, சுமார் 4 கோடியே 42 லட்சம் ஆர்டர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1வது இடம்:
இந்திய உணவு சந்தையில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக திகழ்வது வேறொன்றுமில்லை — பிரியாணி.
2025ஆம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் சுமார் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது இரண்டாவது இடத்தில் உள்ள பர்கரை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் தம் பிரியாணி, லக்னவ் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என எந்த வகையாக இருந்தாலும், இந்தியர்களின் முதல் தேர்வு பிரியாணிதான் என்பதை இந்த அறிக்கை உறுதியாக நிரூபித்துள்ளது.
மொத்தத்தில், 2025ஆம் ஆண்டில் மேற்கத்திய உணவுகளான பீட்சா, பர்கர் ஆகியவை ஆதிக்கம் செலுத்தினாலும், பிரியாணி என்ற ஒற்றை உணவின் முன்னால் மற்ற அனைத்தும் ஜுஜூபி தான் என்பது நிதர்சனமாகியுள்ளது.








