கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்ட சாதனையை நம்ம ஹிட்மேன் ரோகித் சர்மா படைக்கத் தயாராகி விட்டார். நாளை வதோதராவில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மாவின் பேட்டிலிருந்து பறக்கப்போகும் அந்த இரண்டு சிக்ஸர்கள் ஒரு புதிய வரலாற்றையே எழுதப்போகின்றன.
அது என்ன சாதனை என்பதை இப்போது பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் மழை பொழிவதில் ரோகித் சர்மாவுக்கு நிகர் ரோகித் சர்மாதான். இதுவரை 648 சிக்ஸர்களை விலாசி தள்ளி, மற்ற வீரர்களை விட பல மைல்கள் முன்னிலையில் நிற்கிறார். இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவை.
நாளைய போட்டியில் அந்த இரண்டு சிக்ஸர்களை அடித்துவிட்டால், சர்வதேச கிரிக்கெட்டில் 650 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைப்பார். 600 சிக்ஸர்களை கடந்த ஒரே வீரரும் இவர்தான்.
ஏற்கனவே அதிக ஒருநாள் போட்டி சிக்ஸர்கள், அதிக டி20 சிக்ஸர்கள், அதிக இரட்டை சதங்கள் என ரெக்கார்ட் புத்தகமே ரோகித் சர்மா பெயரில்தான் எழுதப்பட்டுள்ளது. தற்போது 2027 உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக, இந்த நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, அதாவது 2025ஆம் ஆண்டு, ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து தனது ஆதிக்கத்தை காட்டிய ரோகித், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இன்னும் ‘சிங்கம்’ என்பதை நிரூபித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் சிக்கிமணிக்கு எதிராக 155 ரன்கள் அடித்து மிரட்டிய ரோகித், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் காட்டிய அதே பார்மையை இப்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் வெளிப்படுத்தப் போகிறார்.
வதோதரா மைதானம் சிக்ஸர்களுக்கு பெயர் பெற்றது. எனவே நாளை ரோகித் சர்மாவின் அந்த 650வது சிக்ஸரை காண ரசிகர்கள் தயாராகுங்கள்.








