Home தமிழகம் “எளிய குடும்பத்திலிருந்து ஐபிஎஸ் ஆஃபீசர்: இன்பாவின் வெற்றி”!

“எளிய குடும்பத்திலிருந்து ஐபிஎஸ் ஆஃபீசர்: இன்பாவின் வெற்றி”!

என்னுடைய பெயர் இன்பா. நான் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவள். தற்போது 2024 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, கோயம்புத்தூரில் ஏஎஸ்பி டிரெயினியாக பணியாற்றி வருகிறேன்.

என்னுடைய தந்தை அரசு பேருந்து நடத்துநர். என் தாயார் வந்து பிடி சுத்துவாங்க. இத்தகைய எளிய குடும்பப் பின்னணியில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளுக்கு வருவது மிகவும் கடினம் என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது உண்மை அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு உதவித் திட்டங்களை நாம் சரியாக பயன்படுத்தினால், இந்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும்.

நான் பி.இ. இன்ஜினியரிங் பட்டதாரி. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். முதல் இரண்டு முயற்சிகளிலும் நான் வீட்டிலிருந்தே படித்து வந்தேன். பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாததால், சென்னையில் தங்கி படிக்க இயலவில்லை.

அதன் பின்னர், அரசு வழங்கும் ஒரு திட்டத்தின் கீழ் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய சிவில் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பயிற்சி பெற்றபோதுதான் பிரிலிம்ஸ் தேர்வை வெற்றிகரமாக கடந்து வந்தேன். தொடர்ந்து மேயின்ஸ் தேர்விற்கான பயிற்சியையும் அதே நிறுவனத்தில் பெற்றேன்.

அந்த நிறுவனத்தில் தங்கும் கட்டணம், பயிற்சி கட்டணம் போன்றவை எதுவும் இல்லை. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். பின்னர் ஸ்காலர்ஷிப் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மாதம் ரூ.7,500 உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த உதவி என் தயாரிப்பில் மிகப் பெரிய துணையாக இருந்தது.

மேயின்ஸ் தேர்வு வரை அந்த நிறுவனத்தில் தங்கி படிக்க முடிந்தது. அதன் பின்னர் நேர்காணல் தயாரிப்புக்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது வீட்டிலிருந்து படிப்பது சற்று கடினமாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் ஸ்காலர்ஷிப் (Scholarship) தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் கிடைத்த மாதாந்திர உதவித் தொகையை கொண்டு சென்னையில் தங்கி படித்து, மாக் இன்டர்வியூக்களிலும் கலந்து கொண்டேன்.

அந்த முயற்சிகளின் பலனாக, 2024 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று இன்று இங்கு நிற்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் ஒரு பயனாளியாக அமர்ந்திருந்த நான், இன்று ஒரு அதிகாரியாக முன்னிலையில் நிற்கிறேன்.

யுபிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் இந்த உயரிய இடத்தை அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள். நன்றி.”