Home தொழில்நுட்பம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய முகம்: “கையில் கிண்ணம் இல்லை… க்யூஆர் கோடுதான்!”

டிஜிட்டல் இந்தியாவின் புதிய முகம்: “கையில் கிண்ணம் இல்லை… க்யூஆர் கோடுதான்!”

“டிஜிட்டல் இந்தியா” என்ற வார்த்தையை நம்ம எல்லாரும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். டீக்கடையிலிருந்து பெரிய ஷாப்பிங் மால்கள் வரைக்கும் இப்போது எல்லா இடங்களிலும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், இப்போது நீங்கள் பார்க்கப் போகும் ஒரு விஷயம், டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கே நம்மை கூட்டிச் செல்கிறது.

கவகாத்தியில் நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கவகாத்தியின் பரபரப்பான ஒரு சாலையில் ஒரு கார் நின்றிருக்கிறது. அந்தக் காரின் பக்கத்தில் பார்வை குறைபாடு உள்ள ஒரு நபர் வருகிறார். அவர் ஒரு பிச்சைக்காரர். ஆனால், அவரிடம் தட்டு இல்லை; கிண்ணமும் இல்லை. அதற்கு பதிலாக, அவருடைய சட்டையில் ஒரு க்யூஆர் கோடு ஸ்கேனர் தொங்கிக்கொண்டிருக்கும்!

ஆம், நீங்கள் கேட்டது உண்மையே. அந்த காரை ஓட்டிவந்த நபர், அந்தப் பிச்சைக்காரரிடம் சிரித்துக்கொண்டே பேசிச் சென்று, தனது போனை எடுத்து அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்புகிறார். இந்த வீடியோவைக் கௌரவ் சோமானி என்ற நபர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ பெருமளவில் வைரலாகியுள்ளது.

“சில்லரை இல்லை” என்று இனிமேல் யாரும் சொல்லிக் கொள்ள முடியாத நிலை! இந்த வீடியோவைப் பகிர்ந்த கௌரவ், “கவகாத்தியில் ஒரு ஆச்சரியமான காட்சியை கண்டேன். ஒரு பிச்சைக்காரர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி உதவி கேட்கிறார். தொழில்நுட்பத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கான சான்று இது. மனிதாபிமானமும் தொழில்நுட்பமும் இணைந்த சிந்திக்க வைக்கும் தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த க்யூஆர் கோடு வசதி எல்லாம் படித்தவர்களுக்கு, பணக்காரர்களுக்கு மட்டுமே என்று நம்மால் நினைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது சாலையோர டீக்கடைக்காரர் முதல் தள்ளுவண்டி வியாபாரி வரை அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது பிச்சைக்காரர்களும் இந்த டிஜிட்டல் உலகில் இணைந்துவிட்டார்கள். உண்மையிலேயே இதுவே “உண்மையான டிஜிட்டல் இந்தியா”!