பெங்களூரு: ஆடியோ சீரிஸ் தளமான பாக்கெட் எஃப்எம் (Pocket FM), தனது தளத்தில் கதைகளை உருவாக்கும் படைப்பாளிகளின் வருமானம் (Creator Economy) 300 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் இது மூன்று மடங்கு வளர்ந்து, 1,000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படைப்பாளிகளின் வருமானம் எவ்வளவு?
நிறுவனம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் வருமானம் ஈட்டும் படைப்பாளிகளில் முதல் 10% பேர் இணைந்து மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ளனர்.
டாப் 1% படைப்பாளிகள்: ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.
மாத வருமானம்: 20%-க்கும் அதிகமான படைப்பாளிகள் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் பங்கு:
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான புதிய படைப்பாளிகள் பாக்கெட் எஃப்எம் தளத்தில் இணைந்துள்ளனர். ஏஐ (AI) தொழில்நுட்பக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு கதையை உருவாக்குவதற்கான நேரம் 90% குறைந்துள்ளது. இதன் மூலம் கதைகளை விரைவாக உருவாக்கி, வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து மிக எளிதாகப் பணமாக்க (Monetization) முடிகிறது.
2026-ஆம் ஆண்டிற்குள் படைப்பாளிகளின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த பாக்கெட் எஃப்எம் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் பார்வை:
“படைப்பாற்றல் என்பது மனிதர்களுக்கு உரியது, ஆனால் அந்தப் படைப்பாற்றலை உலகுக்குக் கொண்டு செல்வதில் உள்ள தடைகளை ஏஐ (AI) நீக்குகிறது” என்று பாக்கெட் எஃப்எம் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரோகன் நாயக் தெரிவித்துள்ளார். இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏஐ சார்ந்த கிரியேட்டர் எகானமி (AI-enabled creator ecosystem) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








