Home உலகம் “உலகமே தவறவிட்ட ஒரு வெற்றி: உணவு தன்னிறைவில் கயானா நம்பர் 1!”

“உலகமே தவறவிட்ட ஒரு வெற்றி: உணவு தன்னிறைவில் கயானா நம்பர் 1!”

உணவுக்காக பிற நாடுகளிடம் கையேந்தாமல், உணவில் தன்னிறைவு பெற்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கும் கயானாவின் சாதனைப் பயணத்தைப் பார்க்கலாம்.

தென் அமெரிக்க நாடான கயானாவில் வசிக்கும் மக்களின் பிரதான உணவுகள் அரிசி, கிழங்கு, கீரை, சோளம், சோயாபீன்ஸ் ஆகியவையே. இவற்றிற்காக அண்டை நாடுகளிடம் கையேந்தாமல், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று உலகுக்கே முன் உதாரணமாக திகழ்கிறது கயானா.

உலகின் மிக உயர்ந்த பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் ஒன்றான கயானா, வடக்கில் அட்லான்டிக் கடல், தெற்கில் பிரேசில், மேற்கில் வெனிசுலா, கிழக்கில் சுரினாம் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரு சிறிய நாடாகும்.

இந்த நாட்டின் 85% நிலப்பரப்பு மழைக்காடுகளால் மூடப்பட்டுள்ளது. மனிதர்களே செல்ல முடியாத பகுதிகளும் இதில் உள்ளன. கூடவே நூற்றுக்கணக்கான ஆறுகளும் உள்ளன. இந்த நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், கரும்புத் தோட்டப் பணிக்காக இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கயானாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராச்சாமி நாகமுத்து, ஐந்து ஆண்டுகள் கயானா நாட்டின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். உலகில் வேறு எந்த நாடும் சாதிக்காததை அமைதியாக சாதித்து, வேளாண்மையில் புரட்சி செய்திருக்கும் கயானா, தன்னை உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், தங்கள் நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் முழுமையான தன்னிறைவை அடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, உலகின் 186 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ‘நேச்சர் ஃபுட்’ என்ற இதழில் உலகளாவிய உணவு உற்பத்தி தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், கயானா நாடு மட்டும் பழங்கள், காய்கறிகள், பால், மீன், இறைச்சி, தாவர புரதங்கள், பிரதான உணவுகள் என ஏழு உணவுக் குழுக்களிலும் தன்னிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சொந்த மண் மற்றும் நீரிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களின் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனை கயானா பெற்றுள்ளது. கயானாவின் அண்டை நாடுகள் உணவு பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தன்னிடம் இருக்கும் விளைநிலங்களைச் சரியாக பயன்படுத்தி சாதனை படைத்திருக்கிறது கயானா. உலகின் பெரும்பாலான விவசாய நிலங்கள் ஒற்றைப் பயிர் சாகுபடியால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன.

ஆனால் கயானா நாட்டு விவசாயிகள் ஒரே வயலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒன்றாக வளர்க்கின்றனர். ஊடுபயிர் சாகுபடியால் மண்ணின் வளம் மேம்படுகிறது.

பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமலேயே பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. வானிலைச் சீற்றம், பூச்சித் தாக்குதல், சந்தை விலை ஏற்றத் தாழ்வுகள் காரணமாக ஒரு பயிர் பாதிக்கப்பட்டால், மற்றொரு பயிர் செழித்து வளர்ந்து விளைச்சலை வழங்குகிறது என அந்நாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய விவசாயக் கொள்கைகள், நிதி உதவி, விவசாய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை விவசாயிகளுக்கு நேரடியாக கிடைப்பதால், அரிசி, சோயாபீன்ஸ், சோளம், காய்கறிகள், கீரை வகைகள், கிழங்குகள் ஆகியவற்றின் சாகுபடிகள் கொடிகட்டி பறக்கின்றன.

வேளாண்மையில் லாபத்திற்கு உத்தரவாதம் இருப்பதால், கயானா நாட்டில் பெரும்பாலும் இளைஞர்களே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கயானாவின் வெற்றி ஒரே இரவில் நிகழ்ந்ததல்ல.

வேளாண் இயந்திரங்களின் மீது வரி நீக்கம், நீர் மேலாண்மை, விளைபொருட்களைப் பதப்படுத்தும் வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் வேளாண் கல்வி ஆகியவற்றில் செய்யப்பட்ட நிலையான முதலீடுகளின் மூலம் கயானா இந்த வெற்றியை கண்டுள்ளது. உணவுப் பொருட்களுக்காக எந்த நாட்டிடமும் கயானா கையேந்துவதில்லை.

உலகில் பல நாடுகள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வரும் நிலையில், தன் மண்ணையும் விவசாயத்தையும் நம்பி ஒரு நாடு தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதைக் செயலில் செய்து காட்டியுள்ளது கயானா.

கயானாவைப் போலவே, மற்ற நாடுகளும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற குரல்கள் பல நாடுகளில் எழத் தொடங்கியுள்ளன.

கயானாவைப் போல இந்திய மக்களின் உணவுகளும் எளிமையானவையே. அரிசி, கோதுமை, மீன், இறைச்சி போன்றவையே பிரதான உணவுகள். இருப்பினும், பாமாயில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவலம் இந்தியாவில் தொடர்கிறது.

மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கினாலும், உணவு தானியங்களுக்காக பிற நாடுகளிடம் கையேந்துவதை நிறுத்த வேண்டும்.

பரந்து விரிந்த இந்திய நாட்டில் விளைவிக்க நிலம் இருக்கிறது. உழைக்க மக்கள் இருக்கிறார்கள். அரசுகளிடம் தான் திட்டமிடல் இல்லை; மனப்பான்மையும் இல்லை.