Home தொழில்நுட்பம் ஆப்பிள் vs இந்திய அரசு: iPhone பயனர்களின் Privacy ஆபத்திலா?

ஆப்பிள் vs இந்திய அரசு: iPhone பயனர்களின் Privacy ஆபத்திலா?

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் மற்றும் இந்திய அரசு இடையே பெரும் பணிப் போராட்டம் உருவாகியுள்ளது. காரணம் — இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய உத்தரவு.

இனி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஐபோன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியை நீக்க முடியாதபடி முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்பது அந்த உத்தரவு.

திருட்டுப் போன்களை கண்டறியவும், சைபர் குற்றங்களைத் தடுக்கவும் இந்திய தொலைத்தொடர்பு துறை இந்த ‘சஞ்சார் சாத்தி’ செயலியை உருவாக்கியுள்ளது.

Samsung, Xiaomi, Apple உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த செயலியை தங்கள் போன்களில் நீக்க முடியாதபடி முன்பே நிறுவி, அடுத்த 90 நாட்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று கடந்த நவம்பர் 28ஆம் தேதி அரசு அறிவுறுத்தியது.

ஆனால் Apple இந்திய அரசின் இந்த உத்தரவை ஏற்க முடியாது எனத் தெளிவாக மறுத்துள்ளது. இது தங்கள் வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் என்று Apple கூறியுள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இதுபோன்ற உத்தரவுக்கு நாம் ஒருபோதும் இணங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Apple நிறுவன வட்டாரங்கள், இது சுத்தியலால் அடிப்பது போல அல்ல; இது இரட்டைத் துப்பாக்கியால் சுடுவது போன்ற தாக்கம் கொண்டது (“This is like a double barrel gun”) என்று இந்த உத்தரவின் தீவிரத்தை விளக்கியுள்ளனர்.

இந்த சர்ச்சை வெடித்த நிலையில் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த ஆப் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் விருப்பம், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை நீக்கலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவில் இந்த ஆப்பை செயலிழக்கச் செய்யவோ, நீக்கவோ முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரின் விளக்கமும் அரசின் உத்தரவும் முரண்படுவதால் இந்த விவகாரத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. Samsung, Xiaomi போன்ற ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும் என்பதால், அரசு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தன் iOS தளத்தை ஒரு பாதுகாப்பு கோட்டையாகக் காக்கும் Apple, இந்த விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது என்று கூறப்படுகிறது.

தன் பாதுகாப்பு கோட்டையைத் தளர்த்த Apple சம்மதிக்குமா? இந்திய அரசின் அழுத்தத்திற்கு பணிவதா? அல்லது இந்திய சந்தையை விடத் தனியுரிமையே முக்கியம் என்று பிடிவாதமாக நிற்குமா?

ஒட்டுமொத்த டெக் உலகமும் இந்த மோதலின் அடுத்த கட்டத்தை ஆவலுடன் கவனித்து வருகிறது.