தினந்தோறும் புதுப் புதுத் தந்திரங்களை பயன்படுத்தி மோசடிகள் செய்யும் சைபர் மோசடி கும்பல், நடிகர் சல்மான் கான் பெயரை பயன்படுத்தி ஏமாந்தது. பீகார் மாநிலம், பாட்னா அருகே உள்ள பியூர் பகுதியை சேர்ந்த சுமன் கேசரி என்ற பெண்ணின் செல்போனுக்கு அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதில் பேசியவர்கள் தாங்கள் நடிகர் சல்மான் கானின் உதவியாளர்கள் என்று அறிமுகப்படுத்தி, பின்னர் சல்மான் கான் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும், அதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி, உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தொடர்பை துண்டித்துள்ளனர். இதை கேட்ட சுமன் கேசரிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனக்கு உதவ வந்துள்ளார் என கூறி, ஊர் மக்களிடம் பெருமைப்படுத்திக் கொண்டார். அடுத்த நாள் மீண்டும் அழைத்து, அந்த நபர்கள் சல்மான் கானின் தொண்டு நிறுவனத்திலிருந்து நிதி உதவி வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த உதவியை பெறுவதற்காக, அவர்கள் ஒன்பது வெவ்வேறு வங்கி கணக்குகளை தொடங்கவும், இரண்டு புதிய சிம் கார்டுகளை எடுக்கவும் வற்புறுத்தினர்.
பணம் வரும் என்ற நம்பிக்கையில், சுமன் கேசரி ஒன்பது வங்கி கணக்குகளையும் தொடங்கி, இரண்டு சிம் கார்டுகளையும் பெற்றார்.
இதன்பின் அந்த வங்கி கணக்குகளின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் சிம் கார்டுகளை அந்த கும்பல் வசப்படுத்தினர். பின்னர், அந்த பெண்ணுக்கு பணத்திற்கு பதிலாக குஜராத் போலீசிடமிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது.
அந்த நோட்டீஸில், சட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு அவரது வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி விளக்கம் கேட்டார்.
அப்போது, சல்மான் கான் உதவியாளர்கள் என்று பேசியவர்கள் சைபர் மோசடி கும்பல் என்பதும், பெண்ணின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததும் கண்டறியப்பட்டது.
சைபர் மோசடி கும்பல் குறித்து பெண் புகார் அளித்த அடுத்த நாளே, கர்நாடகா போலீசாரிடமிருந்து கூட நோட்டீஸ் வந்தது. இதனால் போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட கும்பலினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.








