சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள், அவற்றின் காலம் மற்றும் அவற்றைப் பற்றிய குறிப்புகளை மத்திய தொல்லியல் துறைக்கு தமிழக தொல்லியல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர், அடுத்த கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கப்படும். பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தாமதமாக தொடங்கியதால், அவை 2025 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டன.
திறந்தவெளி அருங்காட்சியகப் பணிகளும் நடைபெற்றதால், 2025ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை தமிழக தொல்லியல் துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து விட்டது.
இதனைத் தொடர்ந்து, 11ஆம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு, 11ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன.








