Home தமிழகம் “ஒரு கண நேர அலட்சியம்… தீ விபத்தில் பச்சிளம் குழந்தை பலி”

“ஒரு கண நேர அலட்சியம்… தீ விபத்தில் பச்சிளம் குழந்தை பலி”

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில், பாரதி என்பவரின் வீட்டில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த அவரது இரண்டு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருக்குமரன் என்ற மகன் உள்ளார். இவரது மனைவி, கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில், பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். நேற்று காலை, பாரதி தனது குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

அப்போது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வீடு முழுவதும் கேஸ் பரவி இருந்தது. அடுப்பு பற்ற வைத்தவுடன் தீ வீடு முழுவதும் பரவி, பெரும் சேதம் ஏற்பட்டது.

இதனால், பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் ஆகிய இருவருக்கும் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருக்குமரனின் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திருக்குமரன் உயிரிழந்தார். இதேவேளை, அவரது தந்தை பாரதி கவலைக்கிடமான நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் காட்டாங்குளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.