Home இந்தியா “குடியரசுத் தலைவர் விருந்து அழைப்பிதழ்: வடகிழக்கு இந்தியாவின் 2000 ஆண்டு கலை இதில் இருக்கிறதா?”

“குடியரசுத் தலைவர் விருந்து அழைப்பிதழ்: வடகிழக்கு இந்தியாவின் 2000 ஆண்டு கலை இதில் இருக்கிறதா?”

இந்தியாவின் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலைக்கட்டத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆனால் இந்த ஆண்டு அந்த விருந்துக்கான அழைப்பிதழ் வெறும் காகிதமாக இல்லாமல், இந்தியாவின் அஷ்டலட்சுமி மாநிலங்கள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களின் 2000 ஆண்டு கால கலைப் பொக்கிஷமாக உருவெடுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் இந்த தேநீர் விருந்து அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம், குடியரசுத் தலைவர் மாளிகையுடன் இணைந்து கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் பலனாக இந்த அழைப்பிதழ் தொகுப்பு உருவாகியுள்ளது.

பேராசிரியர்கள் ஆண்ட்ரியா நோரோன்ஹா மற்றும் டாக்டர் சி. எஸ். சுசாந்த் தலைமையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட உள்ளூர் கைவினைஞர்கள் இந்த உருவாக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொகுப்பின் இதயமாக விளங்குவது திரிபுராவின் பாரம்பரிய தரி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மூங்கில் பெட்டியாகும். இதன் வெளிப்புற உறை மேகாலயாவின் கையால் செய்யப்பட்ட காகிதம் மற்றும் புகையூட்டப்பட்ட மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசாமின் பழங்கால கையெழுத்துப் பிரதிகளின் ஓவியங்கள் மற்றும் அந்தப் பிராந்தியத்தின் அரிய வகை தாவரங்களின் உருவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

அழைப்பிதழுடன் ஒரு பிரத்தியேக சுவரில் தொங்கும் சுருள் வழங்கப்படுகிறது. அதில் சிக்கிமின் கஞ்சன்கா மலைத்தொடருடன் தொடர்புடைய லெப்சா பாரம்பரிய சிஸ்னு நார் நெசவு, மேகாலயா மவுசன்ராம் பகுதியின் பச்சை மூங்கில் பின்னல் வேலைப்பாடுகள், அசாமின் கோகோனா மூங்கில் இசைக்கருவி, மணிப்பூரின் வரலாற்றுப் புகழ்பெற்ற லாங்பி கருப்பு மண்பாண்டக் கலை, மிசோரத்தின் அடையாளமான புவான்சை கைத்தறித் துணி மற்றும் நாகாலாந்தின் அரிய ஜவுளி வடிவங்கள் ஆகியவையும், வடகிழக்கு எட்டு மாநிலங்களின் கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இயற்கை வளங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கைத்தறி மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வடகிழக்கு மாநில பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சுதேசி உணர்வும் தற்சார்பு பொருளாதாரமும் வலியுறுத்தப்படுவதைக் காட்டும் வகையில், மூங்கில், பிரம்பு, களிமண் போன்ற இயற்கை மூலப்பொருட்களே இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

வெறும் அழைப்பிதழாக மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் ஒரு கலை ஆவணமாக இது திகழ்கிறது. நாட்டின் விளிம்பு நிலை கைவினைஞர்களின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டும் குடியரசுத் தலைவரின் இந்த முயற்சி தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.