சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங், டிஜிட்டல் அரெஸ்ட் என மக்களிடம் சைபர் மோசடி கும்பல்கள் கோடிக்கணக்கான ரூபாயை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றன.
போலியான லிங்குகள் அனுப்பி, போலியான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகள் என கூறி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களை பயன்படுத்தியும் மோசடிகள் அரங்கேற தொடங்கியுள்ளன.
ஈ-காமர்ஸ் தளங்களின் ஓடிபி எண்களை பெற்று சென்னை பெண் ஒருவரிடம் மோசடி நடந்துள்ளது. ஏற்கனவே ஆர்டர் செய்யாமலேயே விற்பனை இணையதளங்கள் மூலம் பொருட்கள் வந்திருப்பதாக கூறி ஓடிபியை கேட்டு வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், நூதனமாக “டெலிவரி ஓடிபி” என இணையதளத்தின் லாகின் ஓடிபியை பெற்று மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த நூதன மோசடி அரங்கேறியது எப்படி?
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி, அந்த பெண் ஃப்ளிப்கார்ட்டில் உடைகள் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அந்த ஆடையும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆடை பிடிக்கவில்லை என்பதால் திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளார்.
அப்போது, ஏற்கனவே தனது அக்கவுண்ட்டை பயன்படுத்தி அந்த ஆடை ரிட்டர்ன் அனுப்பப்பட்டதாகவும், அதற்கான பணம் ரீபண்ட் செய்யப்பட்டதாகவும் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது, ஏற்கனவே ரிட்டர்ன் பணம் ஃப்ளிப்கார்ட்டில் தாங்கள் பதிவு செய்து வைத்திருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் தனது அக்கவுண்ட்டை ஆய்வு செய்த போது, ரீபண்ட் செய்யப்பட்ட பணம் வேறொரு வங்கி கணக்குக்கு சென்றது தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெண் ஆர்டர் செய்த ஆடைக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்திய நிலையில், ரிட்டர்ன் பணம் “பிரபு” என்ற பெயரில் உள்ள யூபிஐ ஐடிக்கு சென்றது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில், பொருட்களை திரும்ப வாங்காமலேயே ரீபண்ட் எவ்வாறு நடைபெற்றிருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் டெலிவரி செய்த ஊழியருக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தபோது, தனக்கு ஆடை டெலிவரி செய்த ஊழியரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. டெலிவரி கொடுத்த அதே நாளில், பொருளை ரிட்டர்ன் கேட்டு விற்பனை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று இதற்கு முன்பும் சில முறை நடந்துள்ளது என்பதும், ஃப்ளிப்கார்ட் கணக்கை ஆய்வு செய்தபோது தெரிய வந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
டெலிவரி ஊழியர் பொருளை டெலிவரி செய்யும் போது, ஓடிபி எண்ணை ஜெனரேட் செய்து கேட்டு பெற்றுள்ளார். அந்த ஓடிபியை ஆய்வு செய்து பார்த்தபோதுதான், அது டெலிவரிக்கான ஓடிபி இல்லை என்றும், ஃப்ளிப்கார்ட் தளத்தில் லாகின் செய்ய பயன்படுத்தப்படும் ஓடிபி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஓடிபியை பயன்படுத்தியே, அந்த பெண் ஆர்டர் செய்த ஆடையை டெலிவரி ஊழியர் ரிட்டர்ன் செய்ததாக காட்டி ரீபண்ட் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பொருள் பெண்ணிடம் வந்து சேர்ந்ததால், அதைப் பற்றி அவர் சந்தேகம் கொள்ளவில்லை.
ஆனால் அந்த ஊழியர், பொருளை ரிட்டர்ன் எடுத்ததாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றி, ரீபண்ட் பெற்றதுடன், அந்த பெண்ணின் ஃப்ளிப்கார்ட் அக்கவுண்ட்டில் தனது கூகுள் பே கணக்கை இணைத்து பணத்தை பெற்றதும் தெரிய வந்துள்ளது.
கேஷ் ஆன் டெலிவரியில் இதுபோன்ற மோசடிகள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய போதும் டெலிவரி ஊழியர் மோசடியை அரங்கேற்றியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எல்லா பொருட்களுக்கும் ஓடிபி வராது என்றும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே ஓடிபி வரும் நிலையை பயன்படுத்தியே இந்த மோசடி நடைபெறுகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெலிவரி ஊழியர்கள் ஓடிபி கேட்டால், அதை படித்து பார்க்காமல் உடனடியாக வழங்கக்கூடாது என்றும், அது பொருளை டெலிவரி செய்ய வந்த ஓடிபியா அல்லது ஆன்லைன் வர்த்தக தளத்தில் லாகின் செய்ய வந்த ஓடிபியா என்பதை சரிபார்த்து வழங்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடியில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் கிடைத்துவிடுவதால், பெரும்பாலும் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. இதனால் பலரும் புகார் அளிப்பதில்லை என்றும், பொருட்களை டெலிவரி செய்யும் ஏஜென்சிகள் பெரிய அளவில் டெலிவரிகளை கையாள்வதால், இதுபோன்று ஒன்று இரண்டு பொருட்கள் காணாமல் போவதை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றும், இதனை பயன்படுத்தியே டெலிவரி ஊழியர்கள் கைவரிசை காட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெண் அந்த பொருளை ரிட்டர்ன் செய்ய முயன்றதால்தான் இந்த முறைகேட்டை கண்டுபிடிக்க முடிந்ததாகவும், சிலர் ரிட்டர்ன் செய்ய முடியாவிட்டால் அந்த பொருளையே பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளனர். டெலிவரி ஊழியரின் விவரங்களை பெற்று, அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.








