Home இந்தியா பட்ஜெட் 2026: தங்கம்–வெள்ளி விலையில் மாற்றம் வருமா? வரி குறைப்புக்கு வாய்ப்பா?

பட்ஜெட் 2026: தங்கம்–வெள்ளி விலையில் மாற்றம் வருமா? வரி குறைப்புக்கு வாய்ப்பா?

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இப்போது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளித் துறையில் இருப்பவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு நிறுவனமான எம்எம்டிசி பிஏம்பி, உள்ளூரில் தங்க சுத்திகரிப்பு செய்யும் ஆலைகளுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து சுத்தமான தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு வரி குறைவாக உள்ளது. ஆனால் தங்கத்தை கட்டிகளாக இல்லாமல், மூலப்பொருளாக இறக்குமதி செய்து, இந்தியாவிலேயே சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வரிச்சுமை விதிக்கப்படுகிறது.

குறிப்பாக சில நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சுத்தமான தங்கத்தை இறக்குமதி செய்வது லாபகரமாக உள்ளது. இதனால் உள்ளூரில் தொழில் செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து எம்எம்டிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமித் குஹா கூறுகையில், உள்ளூரில் தங்க சுத்திகரிப்பு செய்யும் ஆலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்காக, மூலப்பொருளாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் உலகத் தரத்திற்கு வளர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, கோல்டு டோரே (Gold Dore) இறக்குமதிக்கு 6% வரி விதிக்கப்படுகிறது. உள்ளூர் ஆலைகளுக்கு சின்ன சலுகையாக 0.65% குறைத்து 5.35% வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது போதுமானதல்ல; இந்த வித்தியாசத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தற்போது வெள்ளிக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு எம்எம்டிசி நிறுவனம் 40 டன் தங்கத்தை இறக்குமதி செய்த நிலையில், 50 டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலேயே 60 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தங்க இறக்குமதியை விட அதிகமாக உள்ளது.

எனவே, இந்த பட்ஜெட்டில் உள்ளூர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சாதகமாக வரி குறைக்கப்பட்டால், அது இந்தியாவின் தங்க சுத்திகரிப்பு துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

அதுமட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளிலும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது பிப்ரவரி 1ஆம் தேதி தெரியவரும்.