சைவ உணவு உண்பவர்களை விட இறைச்சி உண்பவர்களுக்கு 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
80 வயதுக்கு மேற்பட்ட 5,000 சீன முதியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சைவ உணவு உண்பவர்களை விட இறைச்சி உண்பவர்களுக்கு 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இளம் வயதில் தாவர உணவுகள் இதய நோய்களையும், சர்க்கரை நோயையும் குறைக்க உதவினாலும், 80 வயதுக்கு பிறகு உடலின் தேவைகள் மாறுகின்றன. வயது முதிர்வில் தசை மற்றும் எலும்பு வலிமை குறைகிறது.
இறைச்சி மற்றும் விலங்கு சார்ந்த உணவுகளில் உள்ள உயர்தர புரதமும் , வைட்டமின் B12-உம் இதற்காக அவசியமாகின்றன. இந்த ஆய்வில், ஆரோக்கியமான உடல் எடை கொண்ட சைவ உணவு உண்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் இல்லை.
ஆனால் சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்ட சைவ உணவு உண்பவர்கள் 100 வயதை அடைவதில் சிரமப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
100 வயது வரை வாழ விரும்புவோர், வெறும் தாவர உணவுகளை மட்டுமே உண்பதற்கு பதிலாக, தேவையான அளவு பால், முட்டை அல்லது மீன் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வது தசை வலிமைக்கும், ஆயுளுக்கும் நல்லது.
இது தாவர உணவுகளின் நன்மைகளை மறுப்பதல்ல. மாறாக, 50 வயதில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளும், 90 வயதில் தேவைப்படும் ஊட்டச்சத்துகளும் வெவ்வேறானவை என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.
முதிர்ந்த வயதில் நோய்களைத் தடுப்பதைவிட, உடல் எடையையும் தசை வலிமையையும் பராமரிப்பதே நீண்ட ஆயுளுக்கான ரகசியமாகும்.








