சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சில வாரங்களுக்கு பிறகு, இன்னொரு பிரபல சீரியல் நடிகை நந்தினி உயிரை இழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் “கௌரி” என்ற சீரியலில் துர்க்கா மற்றும் கனகா என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை நந்தினி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு தாய்மொழியாக உள்ளவர். நந்தினி கன்னடத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழில் கௌரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலேயே இரட்டை வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சீரியலின் சூட்டிங் ஆரம்பத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. நந்தினியும் பெங்களூருவில் தங்கி நடித்து வந்தார். சமீபத்தில் சூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டது. நந்தினியும் சென்னைக்கு வந்து சூட்டிங் கொடுத்து இருந்தார்.
சீரியலில் இடைவேளை (பிரேக்) ஏற்பட்ட பிறகு, நந்தினி மீண்டும் பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு திங்கட்கிழமை அன்று அறையில் தூக்குயிட்டு உயிரை இழந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களிலும் அவரது ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நந்தினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறப்புக்கு முன்பு நந்தினி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், திருமணமாகாத நந்தினியை அவரது பெற்றோர் திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அவர் மனதளவில் தயாராக இல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நந்தினி கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்பது தெரிந்துள்ளது.
இதுவே முதற்கட்ட தகவல். விசாரணை முடிந்த பின்பு நந்தினியின் மரண காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஒளிபரப்பான சீரியல் காட்சிகளில் நந்தினி விஷம் குடிக்கும் காட்சிகளில் நடித்திருந்த நிலையில், அவரின் உண்மையான விபரீத மனநிலை இதற்கு எதுவும் சம்பந்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினி உயிரை இழந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








