Home இந்தியா ”ஒரே ஒரு எழுத்துப் பிழையால் 16.5 லட்சம் ரூபாய் பறிபோனது!

”ஒரே ஒரு எழுத்துப் பிழையால் 16.5 லட்சம் ரூபாய் பறிபோனது!

20,000 ரூபாய்க்கு பதிலாக 20,000 டாலரை பிரேசில் பத்திரிகையாளருக்கு அனுப்பியதால் 16.5 லட்சம் ரூபாயை இழந்த நிலையில் கேரள பல்கலைக்கழகம் நிற்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த கவனக்குறைவான தவறு? பார்க்கலாம்.

கேரள பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்கா ஆய்வு மைய மாணவர்களுக்கு, கடந்த 2023 ஆம் ஆண்டு பிரேசிலைச் சேர்ந்த மிலன் சிம் மார்டினிக் என்ற பத்திரிகையாளர் ஆன்லைன் மூலம் நான்கு முறை வகுப்பெடுத்துள்ளார்.

அதற்கான சன்மானமாக 20,000 ரூபாயை திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள எஸ்பிஐ வங்கி மூலம் பல்கலைக்கழகம் அவருக்கு அனுப்பியது.

ஆனால் வங்கி பரிமாற்றத்தின் போது எழுத்தர் தட்டச்சில் செய்த ஒரு சிறிய தவறு, கேரள பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்கா ஆய்வு மையத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளரின் மனைவி கட்லின் மார்டினிக்கின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்போது, 20,000 ரூபாய்க்கான தொகைக்கு முன்பு இந்திய ரூபாயின் குறியீட்டை பதிவிடுவதற்கு பதிலாக டாலர் குறியீட்டை பதிவிட்டுள்ளார்.

இதனால் 20,000 ரூபாய்க்கு பதிலாக, லத்தீன் அமெரிக்கா ஆய்வு மையத்தின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 16.5 லட்சம் ரூபாய் கூடுதலாக சென்றுள்ளது.

கடந்த 2023 ஜூன் 15ஆம் தேதி நேர்ந்த இந்த தவறு குறித்து சம்பந்தப்பட்ட பிரேசில் பத்திரிகையாளரை தொடர்புகொண்டு பல்கலைக்கழகம் தெரிவித்தபோது, பணத்தை திருப்பி அனுப்புவதாக உறுதியளித்த அவர், பின்னர் பணத்தை அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் பணம் திரும்ப வராத நிலையில், சில மாதங்களிலேயே பத்திரிகையாளர் மார்டினிக் உயிரிழந்ததால், 16.5 லட்சம் ரூபாயை திரும்பப் பெறுவது மேலும் சிக்கலாகியுள்ளது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தனது தவறை ஒப்புக்கொண்டாலும், பல்கலைக்கழகம் தற்போது வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.

தட்டச்சில் ஏற்பட்ட ஒரே ஒரு தவறான குறியீட்டால், மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிதியின் பெரும் பகுதியை இழந்திருப்பது, பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.