குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மது குடிப்பது குடலைப் புண்ணாக்கி சேதப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது குடிப்பதால் குடலில் ஏற்படும் பாதிப்புகள் . மது எவ்வாறு குடித்தாலும் அது உடல்நலத்திற்குத் தீங்கானதே.
மது குடிப்பவர்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் அண்மையில் பிரபலமான இதழில் “மது குறித்த மருத்துவம் மற்றும் பரிசோதனை ஆராய்ச்சி” என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இரண்டு மணி நேரத்தில் ஆண்கள் ஐந்து முறை மது குடிப்பதோ அல்லது பெண்கள் நான்கு முறை மது குடிப்பதோ கூட குடலை பலவீனப்படுத்திவிடும்.
குறிப்பாக, செரிமானப் பாதையில் உள்ள உள் அடுக்கின் பாதுகாப்பு அம்சத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் விளைவாக குடலில் ஓட்டை விழுந்து கசிவு ஏற்படக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கவலை, மகிழ்ச்சி அல்லது கொண்டாட்டம் என்ற காரணங்களால் கிடைக்கும் குறுகிய நேரத்தில் அதிக அளவு மது குடிப்பது குடலுக்கும், அதன் வாயிலாக உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மது சிறுகுடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, குடலைக் காக்கும் செல்களை பலவீனப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக குடலில் ஓட்டை ஏற்பட்டு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் மது வேண்டாம் என்பதே உடல்நலத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.








