விண்ணில் பாய்ந்தது “பாகுபலி” ராக்கெட் :
இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய முக்கியமான முயற்சியாக, “பாகுபலி” என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் எல்விஎம்–3 எம்6, இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதிக எடை சுமக்கும் திறன் :
சுமார் 45.3 மீட்டர் உயரமும், கிட்டத்தட்ட 640 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட், இதுவரை 4000 கிலோகிராம் வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவி வந்த நிலையில், முதல் முறையாக 6500 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் சுமந்து சென்றுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோள் :
இந்த ஏவுதலில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனத்துக்குச் சொந்தமான “BlueBird-6” என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்துள்ளது.
செல்போன் டவர் இல்லாத தொடர்பு தொழில்நுட்பம் :
AST SpaceMobile நிறுவனம், செல்போன் டவர்கள் இல்லாமலே நேரடியாக செயற்கைக்கோள் மூலம் மொபைல் சிக்னல்களை வழங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா முழுவதையும் கவர் செய்யும் வகையில் இந்த ஆறு செயற்கைக்கோள்கள் அமைக்கப்படுகின்றன.
பெரிய ஆன்டனா, அதிக பரப்பு :
இந்த செயற்கைக்கோளில் சுமார் 225 கியூபிக் மீட்டர் அளவிலான மிகப்பெரிய அபர்ச்சர் ரேடர் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின், இந்த ஆன்டனா விரிவடைந்து, பரந்த நிலப்பரப்புக்கு சிக்னல்களை வழங்கும்.
முன்னதாக ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஐந்து செயற்கைக்கோள்கள் :
ஏற்கனவே AST SpaceMobile நிறுவனத்தின் ஐந்து செயற்கைக்கோள்கள் SpaceX நிறுவனத்தின் Falcon-9 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தற்போது ஆறாவது செயற்கைக்கோளை இந்தியாவின் இஸ்ரோ வணிக ரீதியில் ஏவியுள்ளது.
இஸ்ரோவின் புதிய சாதனை :
இதுவரை 4000 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவி வந்த இஸ்ரோ, தற்போது 6500 கிலோகிராம் எடையுடைய செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதன் மூலம், உலகளவில் முக்கியமான விண்வெளி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ககன்யான் திட்டத்துக்கு வழிவகுக்கும் முயற்சி :
இந்த சாதனை, எதிர்கால ககன்யான் உள்ளிட்ட மனித விண்வெளி திட்டங்களுக்கு தேவையான அதிக எடை கொண்ட விண்வெளி மாட்யூல்கள் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வ பூமி சுற்றுவட்ட பாதை :
ஏவுதலுக்குப் பிறகு, சரியாக 942-வது வினாடியில் இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 520 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ்வ பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
முதல் முறையாக LEO பாதையில் LVM3 :
மிக முக்கியமாக, இதுவரை எல்விஎம்–3 ராக்கெட் மூலம் தாழ்வ பூமி சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய அனுபவம் இஸ்ரோவுக்கு இல்லை. முதல் முறையாக, அதுவும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை LEO பாதையில் நிலைநிறுத்தும் பணியாக இது அமைந்துள்ளது.
இஸ்ரோவின் வணிக விண்வெளி வளர்ச்சி :
இதன் மூலம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதன் வணிக ரீதியிலான செயல்பாடுகளில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. உலக நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் சேவையை நாடும் சூழல் உருவாகியுள்ளது.
குறைந்த செலவு, அதிக நம்பகத்தன்மை :
குறைந்த செலவு, 100 சதவீத வெற்றிப் பதிவுடன் கூடிய ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை, இந்த அமெரிக்க நிறுவனத்தை இஸ்ரோவை தேர்வு செய்ய வைத்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எதிர்கால ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பு :
இந்த வெற்றியின் மூலம், எதிர்காலத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபட வாய்ப்பு அதிகரித்துள்ளது.







