பூமிக்கு மேலே உள்ள விண்வெளி ஒரு அமைதியான இடம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை இப்போதே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், விண்வெளி இப்போது ஒரு சீட்டுக்கட்டு மாளிகை போல எந்த நேரத்திலும் சரிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இன்டர்நெட் முதல் ஜிபிஎஸ் வரை அனைத்துமே இன்னும் சில நாட்களில் முடங்கி போகும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
தற்போது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் சுற்றி வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு 22 வினாடிகளுக்கும் ஒருமுறை ஏதோ ஒரு இரண்டு செயற்கைக் கோள்கள் 1 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒன்றையொன்று மிக நெருக்கமாக கடந்து செல்கின்றன.
குறிப்பாக, ஈலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் மட்டும் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒருமுறை இத்தகைய ஆபத்தான சூழலை சந்திக்கின்றன.
இந்த சூழலில் ஒருவேளை ஒரு பெரிய சூரியப் புயல் பூமியை தாக்கினால் என்ன நடக்கும்? அதுதான் இப்போதைய மிகப்பெரிய பயம். சூரியப் புயல்கள் வளிமண்டலத்தை சூடாக்கும் போது, செயற்கைக் கோள்களின் வேகம் மாறுபட்டு அவை கட்டுப்பாட்டை இழக்கக் கூடும்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள “கிராஷ் கிளாக்” என்ற புதிய கணக்கீட்டின்படி, ஒருவேளை மனிதர்கள் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்தும் திறனை இழந்தால், வெறும் 2.8 நாட்களில் ஒரு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு விண்வெளியே மாறிவிடும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 121 நாட்களாக இருந்த இந்த ஆபத்துக் காலம், தற்போது வெறும் மூன்று நாட்களுக்கும் குறைவாக குறைந்துவிட்டதுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி. வெறும் 24 மணி நேரம் நாம் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்த தவறினால்கூட, 30% மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒருமுறை இந்த மோதல் தொடங்கிவிட்டால், அது கெஸ்லர் சிண்ட்ரோம் என்ற சங்கிலித் தொடர் விபத்துக்கு வழிவகுக்கும். அதாவது, ஒரு செயற்கைக் கோள் மற்றொன்றின் மீது மோதி, அதன் சிதறல்கள் அடுத்தடுத்த செயற்கைக் கோள்களை அழிக்கும்.
இறுதியில் பூமியைச் சுற்றி ஒரு பெரிய குப்பை மேகம் உருவாகி, இனிவரும் தலைமுறையினரால் ஒரு ராக்கெட்டை கூட விண்வெளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படும்.
1859 ஆம் ஆண்டு ஏற்பட்ட காரிங்டன் நிகழ்வு போன்ற ஒரு சூரியப் புயல் இப்போது ஏற்பட்டால், ஒட்டுமொத்த தகவல் தொடர்பு சாதனங்களும் முடங்கி, மனித இனம் மீண்டும் பழைய கற்காலத்திற்கே தள்ளப்படும் அபாயம் உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியோ அல்லது விண்வெளி பாதுகாப்பா என்ற விவாதம், இப்போது உலக விஞ்ஞானிகளிடையே பெரும் அணலை கிளப்பியுள்ளது.








