ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே கனமழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கனமழையுடன் நிலச்சரிவும் ஏற்படுவதால் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் உருக்குழைந்து காட்சி அளிக்கின்றன.
தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உத்தராகாண்ட் மாநிலத்தில் அல்மோரா, பாகேஸ்வர், சாமோலி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக், தோடா, கதுவா, கிட்வார், குல்காம் உள்ளிட்ட பகுதிகளிலும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா, கங்கரா, கின்னாவூர், குழு, சிம்லா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அங்குள்ள செனாப் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு காரணமாக 130 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் மாயமாகி உள்ளனர்.
இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலம் சுரேந்தர் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் படோன் கிஷ்வார் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் பெய்யும் இயல்பான அளவை விட நடப்பாண்டு அதிக மழை பதிவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.








