குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் பத்ரா தாலுக்கா அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஷானா சாவுதா. 45 வயதான இவருக்கு திருமணமாகி, பாவனா என்ற மனைவியும், 17 வயதுடைய ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு பாவனா தனது மகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார். ஷானா சாவுதா தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, ஷானா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதை கண்டு பாவனா அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டு ஷானா சாவுதா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். யார்மீது சந்தேகம் உள்ளதா என குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, ரஞ்சித் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டது.
அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித், ஷானாவின் மைனர் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்திருந்தது. அதையும் மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் காதலியை அழைத்துக்கொண்டு ரஞ்சித் ஊரை விட்டு சென்றதாக தெரிகிறது.
இதனால் ஷானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில்தான் ரஞ்சித் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது ஷானாவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததை அடுத்து, ஷானா தனது மகளை கடுமையாக கண்டித்ததோடு, அவளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். வீட்டை விட்டு காதலனுடன் சென்ற பிறகு அந்த கண்டிப்பு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், மனைவியும் மகளையும் வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. தந்தை உயிருடன் இருக்கும் வரை காதலனுடன் சேர முடியாது என்பதை அந்த மைனர் சிறுமி உணர்ந்துள்ளார். இதனால் தந்தையை தீர்த்துக்கட்ட காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்று மாதங்களாக காதலனுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்த சிறுமி, இறுதியாக தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து தந்தை மயங்கியதும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, இந்த மாதம் 16ஆம் தேதி உணவில் தூக்க மாத்திரைகளை பெற்றோருக்கு கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சரியான அளவில் மருந்து கலக்கப்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இரண்டாவது முறையாக குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். தண்ணீர் கசப்பாக இருந்ததால் யாரும் அதை குடிக்கவில்லை. இதனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
மூன்றாவது முறையாக, மீண்டும் உணவில் சரியான அளவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதனால் தாயும் தந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில், சிறுமி தனது காதலன் ரஞ்சித்தையும், அவரது நண்பர் மகேஷ் என்பவரையும் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
ஷானா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்ற ரஞ்சித், தனது நண்பன் மகேஷுடன் சேர்ந்து கத்தியால் குத்தி அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாவனாவுக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருந்ததால், அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை.
தந்தை உயிரிழந்ததை சிறுமி ஜன்னல் வழியாக பார்த்ததாகவும், இது விசாரணையில் தெரிய வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மைனர் சிறுமியை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் மகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.








