தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG) தூதர்களில் ஒருவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐந்தாவது சர்வதேச இளைஞர் மாநாடு கடந்த மாதம் தாய்லாந்தின் பேங்காக் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 62 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக வேலூர், நாமக்கல், தஞ்சாவூர், சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களின் அரசு பள்ளிகளில் இருந்து ஆறு மாணவர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தொடர்பாக தமிழ்நாட்டின் சிறந்த செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த ஆறு மாணவர்களும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) சர்வதேச தூதர்களாக (Ambassadors) நியமிக்கப்பட்டனர்.
சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆஷ்வாக், பருவநிலை மாற்றம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. “அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாற்றி அசத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை நிரூபித்தோம்,” என்று மாணவர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களை நேரடியாக சந்தித்த தாய்லாந்து அமைச்சர், அவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை குறித்து தலைமை ஆசிரியர் நல்லினி தெரிவித்ததாவது:
“எங்கள் பள்ளி மாணவர்கள் ஐ.நா. தூதர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப் பெருமை. இது எங்கள் பள்ளிக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெரும் கண்ணியத்தை பெற்றுத்தந்துள்ளது.”
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் உலகளாவிய மேடையில் குரல் கொடுத்து சாதித்திருப்பது, தமிழகக் கல்வித் தரம் மீண்டும் நிரூபித்திருப்பதாக கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர்.








