உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கௌர் இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெற்றியை ருசித்தது. அந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகிய ஹர்மன் பிரீத் கௌர் ஆவார். இன்று அவர் சென்னை வந்துள்ளார்.
சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து கலந்து கொள்ள உள்ள நிலையில், முதல் நிகழ்வாக முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்வில் அவர் தற்போது கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் சென்னை வந்தவுடன், சாலையோரம் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் நீண்ட வரிசையாக நின்று அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு மாலை அணிவித்து, அந்த தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்வில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். மேலும், பல துறைகளில் சிறந்து விளங்கிய இளம் வீரர்களை பாராட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அடுத்து, அவர் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மற்றொரு நிகழ்விலும் பங்கேற்க உள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 36 வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய ஹர்மன் பிரீத் கௌரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் நேரடியாக பாராட்டு தெரிவித்தனர். அண்மையில் பிரதமர் மோடி அவரை தனது இல்லத்துக்கு அழைத்து சந்தித்து வாழ்த்தினார்.
இந்த வெற்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்மன் பிரீத் கௌரின் சென்னை வருகையும், தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.








