2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பின், 2011ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இதற்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லாத இந்திய அணி, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம், அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மிகப்பெரிய மனவலியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஓய்வை அறிவிக்கலாம் என நினைத்ததாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாஸ்டர்ஸ் யூனியன் நிகழ்ச்சியில் பேசிய ரோகித் சர்மா, அந்த தோல்வி உடலில் இருந்த அனைத்து சக்தியையும் உறிஞ்சிவிட்டதாக கூறினார். தோல்வியை தாங்குவது என்பது மிகவும் கடினமான விஷயம்.
ஆனால் அதோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. தோல்வி ஒரு பாடம் தான். அதிலிருந்து மீண்டும் எப்படி புதிதாக ஒரு பயணத்தை தொடங்குவது என்பதை சிந்தித்ததாக தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக டி20 உலகக் கோப்பை வரவிருந்ததால் அதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. மீண்டு வர நேரமும் சக்தியும் தேவைப்பட்டது என ரோகித் சர்மா கூறினார்.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றத் தவறிய ரோகித் சர்மா மிகுந்த மனவலியை எதிர்கொண்டிருந்தார். ஆனால் அந்த மனவலியை வென்று, மீண்டும் அதே உத்வேகத்துடன் பயணித்த அவர் இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார்.
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதுடன், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, அந்த அணியின் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஓய்வை அறிவிக்காமல் தொடரும் அவர், 2023ல் தவறிய உலகக் கோப்பையை 2027ல் கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் அந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.
2025ஆம் ஆண்டில் மட்டும் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 650 ரன்களை குவித்துள்ளார். மேலும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.








