ஐபிஎல் தொடரில் அதிரடி ஆல்–ரவுண்டராக கருதப்பட்டு வந்த ஆன்ட்ரே ரசல் திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா அணியில் அபாய ஆல்–ரவுண்டராக விளையாடி வந்த ரசலை, சில நாட்களுக்கு முன் கொல்கத்தா அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஆன்ட்ரே ரசல் ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
ரசல் விடுவிக்கப்பட்டதால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் திடீரென வந்த அறிவிப்பில், “கொல்கத்தா அணியைத் தவிர எந்த அணியிலும் விளையாட விருப்பமில்லை” என்று உருக்கமாக தெரிவித்த ரசல், ஐபிஎல்-லிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் கொல்கத்தா அணியுடன் பவர் கோச் என்ற புதிய பதவியில் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசன்களில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதில் ரசல் முக்கிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலரும் இதே போன்று ஐபிஎல் இருந்து விலகிவரும் நிலை உள்ளது.
உதாரணமாக, சென்னை அணியில் விளையாடிய டுவைன் பிராவோ, அணி அவரை விடுவித்த நிலையில், “சென்னையைத் தவிர பிற அணியில் விளையாட மாட்டேன்” என்று கூறி ஓய்வை அறிவித்தார். பின்னர் அவர் சென்னை அணியில் பயிற்சியாளராக இணைந்தார்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டும், விடுவிக்கப்பட்டதும் மும்பையைத் தவிர வேறு அணியில் விளையாட மாட்டேன் என அறிவித்து, ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்று மும்பை அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார்.
இதே வரிசையில், கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்ட்ரே ரசலும், “கொல்கத்தாவைத் தவிர வேறு அணிக்காக விளையாட விருப்பமில்லை” என கூறி ஐபிஎல்-லிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இதனால், அடுத்த மாதம் நடைபெற உள்ள மினி ஏலத்தில் ரசலை பெரிய தொகைக்கு சென்னை அணி எடுக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அதிரடி ஆல்ரவுண்டரான ஆன்ட்ரே ரசல், ஐபிஎல்-லிருந்து தன் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.








