Home இந்தியா “DNA சேதம், புற்றுநோய் ஆபத்தா? முட்டைகள் குறித்து எழுந்த சந்தேகம் – FSSAI சோதனை”

“DNA சேதம், புற்றுநோய் ஆபத்தா? முட்டைகள் குறித்து எழுந்த சந்தேகம் – FSSAI சோதனை”

சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களைத் தொடர்ந்து, தற்போது முட்டைகளின் மாதிரிகளை சேகரிக்க எப்எஸ்எஸ்ஏஐ ( FSSAI) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதாவது, முட்டைகளில் மைக்ரோ புளோரான் என்ற வேதிப்பொருள் உள்ளதா என்பதை கண்டறிய, நாடு முழுவதும் பிராண்டட் மற்றும் அன்பிராண்டட் முட்டைகளை சேகரித்து, அவற்றை 10 ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்புமாறு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமான  FSSAI தனது பிராந்திய அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பின்னணி என்னவென்றால், அண்மையில் ஒரு யூடியூப் சேனல், ஈகோஸ் என்று அழைக்கப்படும் பிரபலமான பிராண்டட் முட்டையின் ஒரு குறிப்பிட்ட பேட்சை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தியது.

அந்த ஆய்வக சோதனையில், தடை செய்யப்பட்ட மைக்ரோ புளோரான் என்ற வேதிப்பொருள், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இது உணவு பாதுகாப்பு மற்றும் முட்டைகளை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சனைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

ஏனெனில், மைக்ரோ புளோரான் என்று அழைக்கப்படும் இந்த வேதிப்பொருள், கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேரும் போது, அது DNA சேதம் மற்றும் புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆய்வக அறிக்கை கூறுகிறது.

எனவே, இதை நீண்ட காலமாக உட்கொள்ளும் போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், பல நாடுகளில் இந்த மைக்ரோ புளோரான் வேதிப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த சந்தேகங்களைப் போக்குவதற்காகவும், தெளிவுபடுத்துவதற்காகவும் இந்த உத்தரவை FSSAI பிறப்பித்துள்ளது.

பிராண்டட் மற்றும் அன்பிராண்டட் ஆகிய இரு வகை முட்டைகளும் தற்போது ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த முட்டைகளை சேகரித்து, ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்புமாறு தற்போது  FSSAI கேட்டுக்கொண்டுள்ளது.